செய்திகள்

ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை சித்தரிக்கும் பட விவகாரம்: நடிகர் ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ்

மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க போவதாகவும் தகவல் வெளியானது.
பாரதீய சிறுபான்மையினர் கட்சியின் தலைவர் சுந்தர்சேகர், நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், நான் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன். எனது தந்தையை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் சுந்தர்சேகர், நடிகர் ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
ஹாஜி மஸ்தான் கடத்தல், தாதா வழக்குகளில் குற்றவாளி என எந்த நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரை ஒரு தாதா போன்றோ அல்லது கடத்தல்காரர் போன்றோ படத்தில் சுட்டிக்காட்டுவது அவதூறு ஆகும். எனவே, அதுபோன்று சித்தரித்து படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சம்பந்தமாக சுந்தர்சேகர் நிருபர்களிடம் கூறியதாவது,
ஹாஜி மஸ்தானின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம். நான், ஹாஜி மஸ்தானின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை தெரிவிக்க தயாராக உள்ளேன்.
இந்த விவகாரம் சம்பந்தமாக நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து எனக்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை. நான், என் தந்தையின் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். இதனால் அந்த படத்தை நானே தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
சென்னைக்கு அருகில் 28–ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மும்பை தாராவியில் உள்ள குடிசைப்பகுதி போன்று மிக பிரமாண்டமாக செட் அமைத்து படத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் சம்பந்தமாக சுந்தர்சேகர் மிரட்டப்பட்டால் பாரதீய ஜனதா கட்சி அவருக்கு துணையாக இருக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.(15)