ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல்
இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் பயணித்த 04 கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
எம்எஸ்சி ஓரியன் என்ற கொள்கலன் கப்பல், சைக்லேட்ஸ் என்ற வணிகக் கப்பல் மற்றும் செங்கடலில் பயணித்த இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (30) அறிவித்தனர்.
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தியப் பெருங்கடலில் எம்.எஸ்.சி ஓரியன் கொள்கலன் கப்பலை இலக்கு வைத்துள்ளனர்.
கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளராக சோடியாக் மரைடைம் என்ற நிறுவனம் காணப்படுவதுடன் இஸ்ரேலிய தொழிலதிபர் இயல் ஆஃபரும் நிறுவனத்தின் பங்காளர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஒத்துழைப்பை பெற்று இயங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து நிலைமை மோசமடைந்துள்ளது.
ட்ரோன், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை ஹுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதன் ஊடாக அவர்களுக்கு பின்னால் வல்லரசு நாடுகள் இருக்கின்றமை உறுதியாகின்றது.
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினை சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
-(3)




