செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வைகோ

நேற்று தனது 92 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய தி. மு. க. தலைவர் கருணாநிதிக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கருணாநிதியின் தமிழ் தொண்டு, இலக்கிய சேவை, அரசியல் பணி, 92 வயதிலும் மக்கள் பணி செய்யும் கடமை உணர்வு ஆகியவை குறித்து வெகுவாக பாராட்டினார்.

ம.தி.மு.க.வை தொடங்கிய பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதிக்கு வைகோ வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இப்போது வாழ்த்து தெரிவித்து இருப்பது தி.மு.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்த தி.மு.க.வினர் மத்தியில் வைகோ பற்றிய உரையாடல்தான் அதிகமாக பேசப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில் வைகோவின் வாழ்த்தும் தி.மு.க. கூட்டணிக்கு அவர் தயாராகி விட்டதையே காட்டுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

யுத்தக்களத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும்போது கலைஞரின் போர்வாள் கலைஞர் கைக்கு திரும்பி வந்துள்ளது என்று தி.மு.க. வினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:–

வைகோவை எப்போதுமே எங்கள் தலைவர்களில் ஒருவராகவே நினைத்து கொண்டிருக்கிறோம். இப்போது கலைஞருக்கு வாழ்த்து சொன்னதன் மூலம் அவர் தி.மு.க. கூட்டணிக்கு தயாராகி விட்டார். வருகிற தேர்தலில் வெற்றி என்பது சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமையும்.

வைகோவுக்கு மாநிலம் முழுவதும் சராசரியாக 4 முதல் 5 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இது கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்றனர்.

தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும், முக்கிய நிர்வாகியாகவும் ஒருகாலத்தில் திகழ்ந்த வைகோ மு.க.ஸ்டாலின் பிரச்சினையால் தி.மு.க.வை விட்டு வெளியேறி ம.தி.மு.க.வை தொடங்கினார்.

அந்த கசப்புணர்வு மறைந்து இருவருக்குள்ளும் இப்போது நெருங்கிய நட்பு மலர்ந்துள்ளதை சமீபத்தில் வைகோவை மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தபோது பார்க்க முடிந்தது.

வீட்டின் வாசல்வரை வந்து மு.க.ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்ற வைகோ தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினிடம் மகிழ்ச்சியாக உரையாடினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு அவர்களிடையே நெருக்கத்தை அதிகமாக்கி உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் இப்போது கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தி.மு.க. கூட்டணியில் வைகோ இடம் பெறுவார் என்பதை உறுதிபடுத்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.