செய்திகள்

100 நாள் வேலைத் திட்டத்தில் திருப்தி: அமைச்சர் ராஜித

100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“அமெரிக்காவிலுள்ள எந்தவொரு ஜனாதிபதியும் குறுகிய காலத்திற்குள் இவ்வாறான உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என அமெரிக்காவின் ஜோன் கெரி கூறியுள்ளார். 75 முதல் 80 வீதமான உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். சட்டமூலங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நிவாரணங்களுக்கான நிதி வழங்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரது சம்பளமும் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளது. பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.  இந்த மாதம் பணவீக்கம் .11 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக்காலத்தில் பணவீக்கம் தசம் அளவில் குறைவடைந்துள்ளதாக நான் நினைக்கின்றேன்.”