செய்திகள்

100 சதவிகித புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொஸ்ரரிக்காவில் மின்சாரம்

கோஸ்டா ரிகா… மத்திய அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு. ஆனால் இன்று உலக அளவில் முன்னோடி நாடாக ஒரு விஷயத்தில் திகழ்கிறது.

100 சதவிகித புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கடந்த 75 நாட்களாக ஒட்டுமொத்த நாட்டுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதே அது.

காரணம் பருவமழை மட்டுமல்ல. அந்த நாட்டு அரசின் அதிரடி ‘க்ளீன் டெக்னிக்கா’ என்ற திட்டம்தான். இதன் மூலம் நாட்டின் அணு சக்தி நிலையம் ஒன்று மூடப்பட்டு, முழுக்க முழுக்க இயற்கை முறையில் மின்சார தயாரிப்பு ஜே போட்டிருக்கிறது.

இதன் வெள்ளோட்டமாக நீர் மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பட்ட மின்சாரத்தை வைத்து, கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் வரை ஒட்டுமொத்த தேசத்துக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கோஸ்டா ரிகா நாடு 51,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்டது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தின் பாதி அளவுதான் அதன் பரப்பளவு. மக்கள்தொகையும் 4.8 மில்லியன் பேர்தான். சுற்றுலா மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் இப்போது சுரங்கத் தொழிலும், கட்டுமானத் தொழிலும் அமெரிக்காவை டிட்டோ அடித்துக்கொண்டு இருக்கின்றன.

உலகத் தொழில் முனைவம் 2014-ன் சர்வேயின்படி, கோஸ்டா ரிகா லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருகுவேவுக்கு அடுத்த இடத்தில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளில் சிறந்து விளங்குகிறது. 80 சதவிகித மின்சாரத் தேவை நீரில் இருந்துதான் அங்கே கிடைக்கிறது. அனல் மின் நிலையங்களைக்கூட பயன்படுத்தாமல் நாட்டின் நீர் சக்தியைக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்துக்கும் மின்வசதி கொடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது ஆளும் அரசு. 2010 வரை 77 சதவிகிதமாக இருந்த ஒரு குடும்பப் பயன்பாடு மின்சார விகிதம் இப்போது 99.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 100 சதவிகிதம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதோடு மிகக் குறைந்த அளவு கட்டணமே மக்களிடம் வசூலிக்கிறது ‘கோஸ்டா ரிகன் எலெக்ட்ரிக் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம்.

அண்மையில் 958 அமெரிக்க டாலர்களை நீர் மின் நிலையங்களுக்காக முதலீடு செய்துள்ளது. இப்போது புதிதாக 55 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் அந்த நாடு, அவசரத் தேவைக்காக சூரிய ஒளியிலும், காற்றாலை மூலமும் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களைக் கொண்டுள்ளது. 100 சதவிகிதம் நீர், காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் மட்டும் மின்சாரம் பெறும் நாடாக தன்னை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது கோஸ்டா ரிகா.