செய்திகள்

100 நாட்களுக்குள் அரசியல் சீர்திருத்தம்: தேசிய நிறைவேற்றுப் பேரவை ஆராய்ந்தது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேசிய நிறைவேற்றுப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. பேரவையின் கூட்டத்தில் இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்ட்டுள்ள அரசியல் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிறைவேற்றுப்பேரவை வாரம் ஒருமுறை கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த பேரவையில், நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். இந்த பேரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடியது.

இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க,ரிசாத் பதியுதீன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.

இந்த கூட்டத்தில், 100 நாட்கள் வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 100 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தகவலறியும் உரிமை சட்டம், தேசிய ஒளடத கொள்கை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பேரவையை வாரத்து ஒருதடவை கூட்டுவது குறித்தும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கு அப்பால், போதைப்பொருள் விவகாரம், ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகள் தொடர்பிலான விவகாரங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டதுடன் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த பேரவை கடந்த 12ஆம் திகதியே நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனினும், நேற்றைய தினமே இந்த பேரவை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.