செய்திகள்

ஜெயலலிதா வழக்கு – புதனுக்குள் தனது வாதத்தைத் தாக்கல் செய்ய சு. சாமிக்கு உத்தரவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் 6 நிறுவனங்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அரசு வழக்கறிஞர் பவானிசிங் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை வரும் புதன்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து கடந்தவாரம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.
நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார். அதற்கு பதிலளித்த பவானி சிங், பதில் அளிக்காத கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக தான் பதிலளிப்பதாக கூறினார். 39-வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது. 6 நிறுவனங்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அரசு வக்கீல் பவானிசிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சுப்பிரமணியசாமி தமது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வருகிற 13-ந் தேதி வரை கால அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதி குமாரசாமி மறுத்து விட்டார். அதோடு வருகிற 11ஆம் தேதி வரை (புதன்கிழமை) கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.