நெஞ்சே எழு 16 – நன்றி பாராட்டுதல்
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
மனிதன் தனக்கு தேவைப்படும் தந்தர்ப்பம் ஒன்றில், அல்லது தன்னால் முடியாத சந்தர்ப்பம் ஒன்றில் இன்னொருவர் உதவி செய்தபோது அதற்கு நன்றி கலந்த பார்வை ஒன்றை உதிர்த்த பொழுதே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
அந்த வகையிலேதான் ஆரம்பந்தொட்டே மனிதனுள் ‘நன்றி’ என்ற உணர்வு மிகப்பெரும் நேச எண்ணமாக உதித்து என்கின்றனர் ஆராட்சியாளர்கள். அதன் தொடர்ச்சியாகவே ஆரம்பகால இயற்கை வழிபாடுகளை எடுத்துக்காட்டலாம். குறிப்பாக இயற்கை வழிபாடுகள் ஆதி கால மனிதர்களால் நன்றி உணர்வுடன் இயற்கைக்கு தெரிவுக்கும் சடங்குகளாக இருந்து வந்தன. அந்த வகையில் பல சடங்குகள் வழக்கொழிந்த போதிலும், இன்றும் தமிழர்களால் தை முதல்நாளில் பூமி உய்ய மெய்ப்பொருளாக இருக்கும் சூரியனுக்கும், உணவு தந்த உழவனுக்கும் நன்றி செலுத்தும் வண்ணம் தைத்திருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருவதை பார்க்கலாம்.
நன்றி என்பது ஒரு உணர்வு! அதாவது தனக்குத்தேவையான ஒன்றை தந்தவருக்கோ அல்லது அறிமுகப்படுத்துபவருக்கோ, அல்லது வழிகாட்டியருக்கோ, உணர்வுடன் தெரிவிக்கும், நடந்துகொள்ளும் ஒரு வித உவகையே நன்றி.
ஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை ‘நீ இல்லாமல் நான் இல்லை’ என்பதுதான். அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம் உணரவேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது. நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செய்துள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.
அதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளது என நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம். இதுவே சந்தோசத்திற்கான நிர்வாக முறை.
தந்தையும் மகனும் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ஐவன் துர்ஹினிவ் எழுதிய மற்றும் ஒரு நன்றி உணர்வுக்கதை கிறிஸ்மஸ் கனவுகள் நன்றி உணர்வு பீரிடும் கதையாக இந்தக்கதை கொண்டாடப்படுகின்றது.
தாயை இழந்து ஒரு குடிகாரத்தந்தையின் பராமரிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ அவன் தங்க, ஒரு குடிசையினை கொண்டிருந்த தந்தையுடன் வாழும் ஒரு சிறுவனையும், அந்தக்கிராமத்தில் இருந்து பல காலத்திற்கு முன்னர் இராணுவத்தில் இணைந்து அதன் பின்னர் இளைப்பாறி தனிமையில் வாழும் றிட்டையட் மேஜரான ஒரு முதியவரையும் வைத்து அந்த கதை செல்லும்.
பசி, ஏக்கம், அன்பின்மை, ஆதரவின்மை விருப்பங்கள் நசுக்கப்படும் ஆத்திரங்கள் இத்தனையும் அனுபவிக்கும், சிறுவனின் பக்கமும், தனிமை, முதுமைப்பயம், தவறவிட்ட கடந்தகாலங்கள், ஏக்கங்கள், அன்பின்மையால்
தவிக்கும் முதியவரின் பக்கமும், ஒன்று சேரும்போது, பரஸ்பர நன்றி உணர்வின் உச்சத்திற்கு அந்தக்கதை செல்லும்.
அதுபோல தனது நன்றிகளை தனது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும், தான் கற்ற பாடசாலைக்கும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எத்தனையோ உள்ளங்களை
கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். நன்றி என்ற உணர்வு மிக மகத்துவமானது என்பதுடன், அது மனங்களை மலரச்செய்வதும் கூட. இந்த நன்றி எனும் உணர்வு மனதில் சந்தோசங்களையும், நேர்ச்சிந்தனைகளையும், எப்போதும் விதைத்து மனது தூய்மையானதாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும் என உள உணர்வு
ஆராட்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக மறை என்று போற்றப்படும் திருக்குறளில்கூட ஐயன் வள்ளுவர் நன்றிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக்குறள்களும் நன்றியின் மகத்துவம் பற்றி பேசவல்லவை.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், எத்தனைபேர் நமக்கு நாளாந்தம் உதவிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் நாம் உடனுக்குடன் நன்றி தெரிவிக்கின்றோமோ? என்று ஆராய்ந்தால் நாம் எவ்வளவு நன்றி கெட்டவர்கள் என்பது நன்றாக புரியும். உதாரணமாக தன் நாட்டிற்காக அல்லது தன் இனத்திற்காக தமது உயிரை மட்டுமன்றி தமது சந்ததியை அழித்துக்கொண்ட வீரர்களுக்குரிய நன்றிகளை நாம் செலுத்துகின்றோமா? அதைவிடுங்கள், தொலைதூர பயணம் ஒன்று போகின்றீர்கள், வாகன சாரதியின் முகமே பலருக்கு தெரிவதில்லை, இவ்வளவு தூரம் உங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து இறக்கிவிடும் சாரதிகளுக்கு யாராவது நன்றி சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்து இறங்குகின்றீர்களா?
காலம் தப்பிப்பெய்யும் மழைபோல உரிய காலத்தில் செலுத்தப்படாத நன்றிகளும் அபத்தமானவையே…
எனவே விட்டுவிடாமல் நன்றி பாராட்டுங்கள்..
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 15 – கடன்பட்டார் நெஞ்சம்…
நெஞ்சே எழு 13 – வள்ளுவன் என்ற வளவாளர்
நெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..
நெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்
நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!
நெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்
நெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்
நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…
நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..
நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..
நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்