செய்திகள்

“13ஆவது திருத்த சட்டம் ஒருபோதும் தீர்வாக அமையாது” என்று மோடிக்கு நேரடியாக கூறினார் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அதிகார பரவலாக்கம் மற்றும் கூட்டுறவு சமஷ்டிக் கட்டமைப்பு ஆகியவற்றின் ஒரு ஆதரவாளர் என்று விளித்துப் பேசிய வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒருபோதும் இறுத்தித் தீர்வாக அமைய முடியாது என்று நேரடியாகவே தெரிவித்தார்.

யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், “வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பங்குபற்றல் மற்றும் சம்மதம் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இலங்கையில் தற்போது இருக்கும் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பில் இருந்து பரிணாமம் பெற்ற 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தமானது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழுகின்ற மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தேவையான அதிகார அளவினை பெற்றுக்கொள்வதற்கு பாரிய சவால்களையும் தடைகளையும் கொண்டிருக்கிறது ” என்று கூறினார்.

” சொத்தலான இந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் தேவையானதும் எதிர்பார்த்ததுமான அதிகாரத்தை வடக்கு மற்றும் கிழக்குக்கு கொண்டுவரவில்லை. இன்றும் கூட ஒருபுறம் மத்திய அரசு மறுபுறம் ஒரு இசைவான ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கின்றபோதிலுமான ஒரு மாகாண அரசு ஆகியவற்றினால் இயக்கப்படும் சமாந்திரமான நிர்வாக கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ஸ உங்களை சந்தித்தபோது 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற உங்களது வெளிப்படையான கோரிக்கையானது இறுதித் தீர்வும் இணக்கப்பாடும் நீண்டதும் கடினமானதுமாக இருக்கப்போகின்ற போதிலும், அதிகாரத்தை நோக்கிய ஒரு சரியான செல்திசையாகும். ஆனால் , 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒருபோதும் இறுதித் தீர்வாக அமைய முடியாது.

நீங்கள் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் , இந்திய மாநிலங்களிடையே ஆக்கத்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு மத்தியில் குவிக்கப்பட்டிருந்த திட்டமிடல் முறையை இல்லாமல் செய்தீர்கள். நீங்கள் அதிகாரத்துக்கான ஒரு ஆதரவாளர் என்பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இதற்காகத்தான் நாங்களும் இலங்கையில் போராடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் அரசியலமைப்பானது மாநிலத்துக்குள் நிலையான அபிவிருத்தி, உள்ளக பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, காவல்துறை மற்றும் நில பாதுகாப்பு போன்றவற்றுக்கு அனுசரணை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்புக்குள் உங்களால் குஜராத் மாநிலத்துக்கு உதவி செய்ய முடிந்த அளவுக்கு எங்களால் மாகாண சபையில் இயங்கமுடியாதிருக்கின்றமை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது, 13 ஆவது திருத்த சட்டம் எந்தளவு வெறுமையானதும் பற்றாக்குறையானதும் என்று 28 அக்டோபர் 1987 அன்று எமது தலைவர்களால் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க தொடர்பாடல் இருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சார்பாக இந்திய தலையீட்டை அவர்கள் கோரினார்கள். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி இந்திய இலங்கை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டபோது , இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களை கவனத்தில் கொண்ட அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் உத்தரவாளராக இந்தியா நின்றது.அந்த நிலைமை இன்று கூட வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கிறது. எமக்கு ஒரு உத்தரவாளரின் தேவை இருக்கிறது. இந்த வகிபாகத்தை செய்வதற்கு உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் இந்திய அரசாங்கம் மிகவும் பொருத்தமானது என்பது எமது நன்கு கவனத்தில் கொல்லப்பட்ட விருப்பமாகும். என்று கூறினார்.