செய்திகள்

13ஆவது திருத்தத்தை விக்னேஸ்வரன் மோடி முன் நேரடியாக நிராகரித்தமை எதிர்பாராததும் அசௌகரியமானதுமான ஒன்று: இந்திய அதிகாரி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தபோது யாழ் கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மோடி மற்றும் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு முன்னால் பகிரங்கமாக அடியோடு நிராகரித்திருந்தமை எதிர்பாராததும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுமாக இருந்தது என்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் இந்தியாவின் த டெலிகிராப் இதழுக்கு தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது திருத்த சட்டம் ஆகியவற்றின் உகப்பான தன்மை குறித்து விக்னேஸ்வரன் மட்டுமன்றி வேறு பல தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் மோடி மற்றும் சமரவீர ஆகியோர் முன்பாக அவர் இதனை நேரடியாக கூறியமை எதிர்பாராத ஒன்று என்றும் ஆனாலும், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் எந்தளவுக்கு வேறுபாடுகள் ஆழமாக இருக்கின்றன என்பதை இது காட்டுவதாக அமைந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

விக்னேஸ்வரன் தனதுரையில், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒருபோதும் இறுத்தித் தீர்வாக அமைய முடியாது என்று கூறி, ” வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பங்குபற்றல் மற்றும் சம்மதம் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இலங்கையில் தற்போது இருக்கும் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பில் இருந்து பரிணாமம் பெற்ற 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தமானது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழுகின்ற மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தேவையான அதிகார அளவினை பெற்றுக்கொள்வதற்கு பாரிய சவால்களையும் தடைகளையும் கொண்டிருக்கிறது ” என்று குறிப்பிட்டார்.
” சொத்தலான இந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் தேவையானதும் எதிர்பார்த்ததுமான அதிகாரத்தை வடக்கு மற்றும் கிழக்குக்கு கொண்டுவரவில்லை. இன்றும் கூட ஒருபுறம் மத்திய அரசு மறுபுறம் ஒரு இசைவான ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கின்றபோதிலுமான ஒரு மாகாண அரசு ஆகியவற்றினால் இயக்கப்படும் சமாந்திரமான நிர்வாக கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன” என்றும் அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார்.