செய்திகள்

13ஆம் திருத்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவார் என்பதனை சஜித் கூற வேண்டும் என்கிறது மொட்டுக் கட்சி!

தான் ஆட்சிக்கு வந்தால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அந்த திருத்தத்தில் உள்ள பொலிஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்களை எவ்வாறு வழங்கப் போகின்றார் என்பதனையும் நாட்டுக்கு கூற வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தேசிய ஏற்பட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவே இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது ஆட்சிக் காலத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அவருக்கு 13ஆவது திருத்தத்தை கொண்டு வர வேண்டியதில்லை. அவரின் தந்தை பிரதமராக இருந்த போதே அந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது தனது தந்தை கொண்டுவந்ததை நிறைவேற்றுவேன் என்று மகன் கூறுகின்றார்.

13ஆவது திருத்தத்தில் நல்ல விடயங்களும் உள்ளன. பிரச்சினைக்குரிய விடயங்களும் உள்ளன. அதிகார பகிர்வு அதில் உள்ளது. அந்த அதிகாரத்தை ஏதாவது வகையில் ஏதேனும் பிரிவினர் முறையற்ற வகையில் பயன்படுத் இடமுள்ளது. அந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதிகள் பலர் இருந்துள்ளனர். இந்நிலையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அதிலுள்ளன. அவற்றை எப்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கப் போகின்றார். இங்கே ஶ்ரீலங்கா பொலிஸார் இருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தால் அந்த அதிகாரத்தை எப்படி வழங்குவார். வடக்கிற்கு தனியான பொலிஸார், கிழக்கிற்கு தனியான பொலிஸார் என்றா வழங்கப் போகின்றார். எமது நாடு 30 வருட யுத்தம் நடந்த நாடாகும். இப்போது நாட்டில் யுத்தம் இல்லை. அவ்வாறான நிலைமையில் இருந்து மீட்ட நாட்டை மீண்டும் பிளவுப்படுத்தவா? போகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சித்தலைவர் இந்த நிலைமைக்கு சென்றுள்ளார். இது ஆரோக்கியமானது அல்ல. இதனால் 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை எவ்வாறு வழங்கப் போகின்றீர்கள் சஜித் பிரேமதாச கூற வேண்டும். நீங்கள் கிளிநொச்சியில் சொல்வதையே தெற்கிலும் கூறுங்கள். அப்போதே மக்கள் புரிந்துகொள்வர் என்றார்.
-(3)