செய்திகள்

13க்கும் அப்பால் அதிகாரங்களை பகிருங்கள் : என்கிறார் சுதந்திரக் கட்சி பேச்சாளர்

அரசாங்கத்திடமுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி 13க்கும் அப்பாலான அதிகார பகிர்வை வழங்குமாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் பேசும் மொழி எதுவாக இருந்தாலும் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும் இது நமது நாடே. எனக்கு குறைவு அவருக்கு அதிகம் என்று கூறுமளவுக்கு இருக்கக் கூடாது. யார் என்ன கூறினாலும் புதிதாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் அரசியலமைப்பில் அதிகாரம் பகிரப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மட்டுமல்ல மற்றைய மாகாணங்களுக்கும் இருக்க வேண்டும். நம்மைப்பற்றி கொழும்பிலிருந்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. எமக்கு தேவையான தீர்மானத்தை நாம் மேற்கொள்ள அதிகாரம் வேண்டும். இதற்குதான் அதிகாரத்தை பகிருமாறு கேட்கின்றோம். 13 பிளஸ் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. அது நமது நாட்டு மக்களுக்காகவே அன்றி இந்தியாவுக்கோ , சீனாவுக்கோ , ரஷ்யாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ இல்லை.
இப்போது மூன்றில் இரண்டு பலம் அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் இப்போது இதனை செய்யாவிட்டால் இனி வாய்ப்பு இல்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)