செய்திகள்

13வது திருச்சட்டத்தின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமே தீர்வு தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியும்- ஹாபீஸ் நசீர் அகமட்

13வது திருச்சட்டத்தின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமே சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வு தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் சந்தை கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சினதும் பிரதேச சபையினதும் 8.5மில்லியன் ரூபாவினை இந்த சந்தைக்கட்டிட தொகுதிக்காக ஒதுக்கீடுசெய்துள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இனங்களுக்கிடையே வேலியை அமைத்து இரு இனங்களையும் மோதவிடும் நிலையை சிலர் ஏற்படுத்த நினைக்கின்றனர்.அவ்வாறானவர்கள் தொடர்பில் இரு சமூகமும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த காலத்தில் இரு சமூகத்தினையும் பிரித்தாள நினைத்தவர்களின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது.இன்றைய நிலையில் அது தொடர்பில் இரு இனங்களும் தெளிவைக்கொண்டிருக்கவேண்டும்.

இன்று இனப்பிரச்சினைக்கான விடயம் ஒரு இழுத்தடிப்பு செய்யும் விடயமாகவே நான் நோக்குகின்றேன்.பேச்சுவார்த்தை,பேச்சுவார்த்தையென எமக்கு புளித்துப்போன விடயங்களே மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.ஆயிரக்கணக்கான வட்ட மேசை மாநாடுகள் நடத்தப்பட்டு எந்தவித தீர்வும் இதுவரையில் வழங்கப்படாதநிலையில் இலகு காத்த கிளிபோலவே சிறுபான்மை சமூகம் இருந்துவருகின்றது.சிறுபான்மை சமூகத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதியும் பிரதமரும் இழுத்தடிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றேம்.

இந்த நாட்டில் உண்மையாகவே அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டுமென இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மனதில் கொண்டிருந்தால் ஏற்கனவே 13வது அரசியல் சீர்திருத்த சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த முன்வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைகளை நகர சபையாக தரமுயர்த்தவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

IMG_0195 IMG_0197 IMG_0199 IMG_0208 IMG_0221 IMG_0229

N5