செய்திகள்

13 ஆவது சட்ட திருத்தம் அமுல்படுத்தப்படும் என்ற ரணிலின் அறிவிப்புக்கு கருணாநிதி வரவேற்பு

இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணங்களுக்கு சிறிதளவு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கருணாநிதி: 1987-இல் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜயவர்த்தனவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் 13-ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, சிங்களத்துக்கு இணையாக தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து, மாகாண வாரியாக உயர் நீதிமன்றம் அமைத்தல் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதனை அமல்படுத்த எந்த அரசும் முன்வரவில்லை.

இந்நிலையில் இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவோம் என நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இந்த அறிவிப்பு உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண புதிய அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே. வாசன்: 1987-ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம அதிகாரம் அளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தம் உருவானது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதுவரை அமுல்படுத்தப்படாமல் இருந்தது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, 13-ஆவது சட்டத்திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழர்களின் நீண்டநாள் கனவு நனவாகும் சூழல் உருவாகியுள்ளது.

வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் உடனடியாக இதனை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு, மறு குடியமர்த்தல், அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

ஜி. ராமகிருஷ்ணன்: இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13-ஆவது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.

இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, வடக்கு மாகாண ஆளுநராக இருந்த சந்திரசிறீயை நீக்கிவிட்டு பாலிகக்காரவை நியமித்தது தமிழர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 13-ஆவது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்ற ரணில் விக்ரமசிங்கேயின் அறிவிப்பும் தமிழர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை முறையாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.