செய்திகள்

13 ஐ அமுலாக்குவதற்கான அழுத்தத்தை இந்தியா தொடர்ந்தும் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்

இலங்கை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்வதற்கான அழுத்தத்தை இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தக் கருத்துக்களை சம்பந்தன் முன்வைத்திருக்கின்றார். சென்னை இந்து பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியிலேயே இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

புதுடில்லியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வெற்றிகரமாக பேச்சுக்களை நடத்துவதற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கும் சம்பந்தன், 13 ஆவது திருத்தம் அமுல்செய்யப்படுவதற்கான அழுத்தங்களை இந்தியா தொடர்ந்தும் கொடுக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தன்னுடைய முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கான விஜயத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கின்றார். நாளை மறுதினம் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்துவார்.