செய்திகள்

3 திருத்தம் எப்போதும் இறுதி தீர்வாக அமையமுடியாது-விக்கினேஸ்வரன்

13 திருத்தம் எப்போதும் இறுதி தீர்வாக அமையமுடியாது என தெரிவித்துள்ள வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு கிழக்கிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்ககூடிய வலுவான முறையை கொண்டுவருவதன் முலமாக 13 திருத்தத்தை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழின் மீராசிறீனிவாசனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை குறித்த இந்தியாவின் வெளிவிவகார கரிசனைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்தவேளை13  திருத்தத்தை   முழுமையாக  நடைமுறைப்படுத்துமாறு அவர் உறுதியாக கோரிக்கை விடுத்தது சரியான திசையிலான ஓரு நடவடிக்கையே.எனினும் இறுதி தீர்விற்கான பாதை மிகவும் கடினமானதாகவும், நீண்ட காலம் பிடிக்க கூடியதாகவும் அமையப்போகின்றது.
13 திருத்தம் என்பது இறுதிதீர்வாக அமையமுடியாது.  அது அவ்வாறு இருந்தாலும் நாங்கள் அவரை வரவேற்கிறோம்,அவரில் எங்களுக்கு நண்பர் ஒருவர் இருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கின்றது.எங்களுக்கான அவரது கரிசனையை பாராட்டுகின்றோம்,வடபகுதிக்கு வரவிரும்பியதையும் வரவேற்கிறோம்,
13வது திருத்தம் குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டிய தருணமிதுவென அவரிற்கு நாங்கள் பரிந்துரைசெய்கிறோம்.இது 1987 இன் இந்திய இலங்கை ஓப்பந்தம் மூலமே உருவானது.   இந்தியாவிற்கும், இலங்கைக்கும்வடமாகணசபைக்கும் இடையில் ஐ.நாவால் நீடிக்கப்பட்ட காலத்திற்குள் புதிய தீர்வை காண்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறவேண்டும், அந்தபேச்சுக்கள் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கான அடிப்படை காரணங்களையும், யுத்தத்திற்கு பின்னர் அவர்களது தேவைகளையும், கருத்திலெடுப்பமாக அமையவேண்டும்.
வடக்கு கிழக்கிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்ககூடிய வலுவான முறையை கொண்டுவருவதன் முலமாக 13 திருத்தத்தை மாற்றவேண்டும்.

புதிய அரசாங்கத்தின் சில தரப்பினர் இனப்பிரச்சினையை மோசமாக்கிய பழைய அரசியல் தந்திரோபாயங்களை பொறுப்பற்ற விதத்தில் கையாள்வது குறித்தே நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம்.  எங்கள் ஜனாதிபதி புத்துணர்வூட்டும் விதத்தில் புதியவராகவுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின்  தலைமைத்துவத்தின் மத்தியில் புதிய கலாச்சாரத்தை காண நாங்கள் விரும்புகின்றோம், அவர்களை தெரிவுசெய்ததில் எங்களது மக்களுக்கும் பங்குள்ளது.  இவ்வாறான அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் இந்தியா பங்களிப்புச்செய்யலாம்.