செய்திகள்

13 வயது மாணவி மீது நான்கு நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்! யாழில் அதிர்ச்சி

பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது மாணவியைத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நீர்வேலியைப் பகுதியினைச் சேர்ந்த இளைஞனை நேற்றைய தினம் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அச்செழு பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்தவாரம் அங்குள்ள ஆலயமொன்றின் திருவிழாவுக்குச் சென்ற போது அங்கு குளிர்பான நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் இனிப்பு வகைகளைக் கொடுத்துச் சிறுமியை ஏமாற்றிப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்குத் தெரியவந்ததை அடுத்து அவர் குறித்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அப்போது குறித்த இளைஞனின் காமவெறி தொடர்பில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பொலிஸார் சிறுமியை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர். தொடர்ந்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நீர்வேலிப் பகுதியினைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனரொருவரை நேற்றுக் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மருத்துவ பரிசோதனையின் பின் யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் கொலைக்கு நீதிகோரியும், சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தும் வடகிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் யாழ்.வலிகாமம் பகுதியில் இன்னொரு மாணவி நான்கு நாட்கள் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கல்விச் சமூகத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் நகர் நிரூபர்-