செய்திகள்

14 வயது பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வயோதிபருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை: நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

பாடசாலை சென்று வந்த 14 வயது மனைவியை 2009 ஆம் ஆண்டு மயக்க மருந்து கொடுத்து கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவரை தாயாக்கிய 62 வயது வயோதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் என்றும் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இதில் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் கந்தையா சித்திவிநாயகம் என்ற வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாகிய ஹம்சிக்காவின் விஞ்ஞான ரீதியான தாய் பாதிக்கப்பட்ட பெண் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விஞ்ஞான ரீதியான தந்தை எதிரியான கந்தை சித்திவிநாயகம் எனவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது டிஎன்ஏ ஆய்வின் மூலம் 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எதிரியாகிய சித்திவிநாயகமே தந்தையாவார் என தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார்.

விசாரணையின் முடிவில் எதிரியைக் குற்றவாளியென மன்று கண்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் தனது தண்டனைத் தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது,

“பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாணவி. சிறுமியாக இருந்தபோது, பாலியல் வல்லுறவின் மூலம் எதிரி அவரை தாயாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பதினான்கு வயது மாணவியைத் தாயாக்கிய கொடூரமான குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே பொருத்தமாகும்.

குற்றம் புரிந்த போது எதிரிக்கு 62 வயது. இப்போது அவருக்கு 69 வயது. பாதிக்கப்பட்டப் பெண் எதிரிக்கு ஒரு பேத்தி மாதிரியாவார்.

இருப்பினும் சமுதாயத்தில் பாலியல் குற்றம் அதிகமாக நடக்கும்போது, நீதிமன்றங்கள் கருணை அடிப்படையில் தண்டனை வழங்குவது குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்து விடும்.

அத்துடன், பாலியல் வல்லுறவு குற்றச்செயல்கள் புரிபவர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்புக்கள், தண்டனைகளில் அச்சமில்லாத நிலை காணப்படுவதற்கும் ஏதுவாகி விடுகின்றது.

இந்த நிலையில், நீதிமன்றங்கள் பெண்களினதும், சிறுவர் சிறுமிகளினதும் அதியுச்ச சட்டத்தின் மேலான பாதுகாவலராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த வழக்கில் வழங்கப்படுகின்ற தீர்ப்பானது, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் வழங்கப்படுகின்றது.

எதிரி தரப்பு சட்டத்தரணியின் கருணை விண்ணப்பத்தையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுக்கத் தவறவில்லை. முதலில் தீர்ப்பு திகதியிட்ட போது நஞ்சருந்தி தற்கொலை முயற்சி செய்த எதிரி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதான வைத்தியசாலையில் கடந்த 15 நாட்களாக் சிகச்சை பெற்று வருகின்றார்.

இரண்டாவது முறையாக தீர்ப்பு வழங்குவதற்கான திகதியாக இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்ட போதும், எதிரிக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சில மணி நேரங்களில் கூட மரணம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே எதிரி மரண படுக்கையில் இருக்கின்ற நிலையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று எதரியின் சட்டத்தரணி கருணை விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். இதனையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.

14 வயதில் மாணவியாக இருந்து போது மானம் பறிபோன நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தையுடன் நீதிகோரி நீதிமன்றில் நிற்கின்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள எதிரிக்கு அதியுச்ச தண்டனையாக 20 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

ஆயினும் எதிரியின் நிலைமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்பவற்றை மன்று மிகவும் கவனமாக ஆய்வு செய்து, பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தமைக்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்குகின்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பின் காரணமாக பிறந்துள்ள குழந்தைக்கும் நட்டயீடாக எதிரி 20 லட்சம் ரூபா செலுத்த வேண்டும். இந்த நட்டயீட்டைக் கட்டத் தவறினால் மேலும் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.