செய்திகள்

15-வது ஆண்டாக தொடரும் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத போராட்டம்

இந்தியாவின் இம்பால் மணிப்பூரின் இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் 14 ஆண்டுகளை நிறைவு செய்து, 15- வது ஆண்டாகத் தொடர்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம்-1958-ஐ திரும்பப் பெற வலியு றுத்தி ஐரோம் ஷர்மிளா கடந்த 2000 நவம்பர் 5-ம் தேதி உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங் கினார்.

ஆயுதப்படை சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதி களில் ராணுவத்துக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது. அங்கு சந்தேகப் படும் யாரையும் பிடிஆணை இன்றிக் கைது செய்யவும், சுட்டுக் கொல்லவும் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 நவம்பர் 2-ம் தேதி இம்பால் அருகே மலோம் என்ற இடத்தில் அசாம் ரைபிள் படைப்பிரிவினர் 10 அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.

தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளது அரசு. மேலும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அவருக்கு திரவு உணவு செலுத்தப்படுகிறது. ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் 15-வது ஆண்டை எட்டியுள்ளதையடுத்து, அவருக்கு ஆதரவாக மணிப்பூரின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் நாடு முழுவதும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள், ஜஸ்ட் பீஸ் பவுண்டேஷன் (ஜேபிஎப்), ஹியூமன் ரைட் அலர்ட்ஸ் (எச்ஆர்ஏ), அபுன்பா மணிப்பூர் மாடம் எஸெல் காங்லப் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஜேபிஎப், ஆசிய மனித உரிமை மேம்பாட்டுக் கழகம் (பாங்காக்), மே 18 நினைவு அறக்கட்டளை (கொரியா), எச்ஆர்ஏ ஆகி அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமைப் போராளிகள், பினாயக் சென், லெனின் ரகுவன்ஷி, சுஷீல் ராஜ் பியாகுரெல் (நேபாள்), வார்தா ஹபீத்ஸ் (இந்தோனேசியா) உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

பினாயக் சென் கூறும்போது, “ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு ஆதரவு தொடரும். உச்ச நீதிமன்றத்தால் 2013ம் ஆண்டு மணிப்பூர் என்கவுன்ட்டர்களைப் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சந்தோஷ் ஹெக்டே குழுவின் தீர்ப்பை துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.