செய்திகள்

ஐ.நா. செப்டெம்பர் அறிக்கையின் பின்னரே உள்ளக விசாரணை: மங்கள சமரவீர

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே இலங்கையின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை ஒரு மாத காலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என வெளியான தகவல்கள் குறித்து இந்திய ஊடகம் ஒன்று வினவிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட பின்னர் அதில் குற்றம் சுமத்தப்படும் நபர்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் இறுதி அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையையடுத்து அது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.