செய்திகள்

17 நாள் தடுப்புக்காவலியிருந்த கலிதா ஜியா திடீர் விடுதலை

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல் வன்முறையில் 28 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஜனவரி 4 அன்று கைது செய்யப்பட்டார் கலிதா ஜியா. இவர் கடந்த 17 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து எதிர்பாராதவிதமாக விடுவிக்கப்பட்டார்.

குல்ஷான் மாவட்டத்தில் இருந்த வங்கதேச தேசியவாத கட்சியின் கட்சி அலுவலகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பரண் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3 மணி அளவில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

”அவர்கள் (போலீஸ்) முதலில் அதிகாலை 2.30 மணிஅளவில் தங்கள் வாகனங்களை நீக்கிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து தண்ணீர் பீரங்கிகளையும் அங்கிருந்து விடுவித்துக்கொண்டனர். அவர்களில் சில போலீஸ்காரர்கள் மட்டும் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்” என வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP)யின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP)யின் நிறுவனரும் கலிதா ஜியாவின் கணவருமான சியவுர் ரஹ்மானின் 79வது பிறந்தநாள் விழாவுக்காக போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பையும் அரசு நீக்கியது. அரசின் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் இரவு கூறியபோது ஜியா தனது கணவரின் கல்லறைக்குச் செல்லவோ அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர் வேறெங்கும் செல்வதற்கும் தடையேதும் இல்லை என்றார்.

ஓராண்டுக்கு முன்னர் ஜனவரி 5-ல் நடைபெற்ற தேர்தலில கலிதா ஜியாவின் பரம எதிரியான ஷேக் ஹசீனா வென்றார். இந்த தேர்தலில் அவர் தில்லுமுல்லு செய்து வென்றதாகவும் அந்த ஜனநாயகப் படுகொலை நடந்து ஓராண்டு ஆனதையொட்டி ஜனவரி 5 அன்று ஊர்வலம் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் கலிதா ஜியா, கடந்த ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலைப் புறக்கணிப்பதோடு புதிய தேர்தலை நடத்தும்படியும் ஷேக் ஹசீனாவை ஜியா கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியா கைதானார்.

இந்நிலையில் அவர் மீதான தடுப்புக்காவல் இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. இன்று அதிகாலை கலிதா ஜியா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களும் தண்ணீர் பீரங்கிகளும் திருப்பிஅனுப்பப்பட்டன.