செய்திகள்

18ம் திருத்தத்தை ஆதரித்ததை தவறென ரத்தினதேரர் ஒப்புக்கொண்டது நல்ல முன்மாதிரி: மனோ

இந்த ஊடக மாநாட்டில் நான் ஒரு தமிழ் கட்சியின் பிரதிநிதியாக கலந்துகொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு தமிழ் கட்சி என்பதைவிட, தமிழர்களையும் உள்ளடக்கிய இலங்கை மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கே கலந்து கொள்கின்றேன் என்று நினைக்கின்றேன். ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக நாம் வாழவேண்டிய காலம் வந்துவிட்டது. சோபித தேரரின் வழிகாட்டலில் இங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் தருணம் வந்துவிட்டது.

சில நாட்களுக்கு முன்னர் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் இரத்தின தேரர் ஒரு முக்கிய விடயத்தை சொன்னார். 18ம் திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்ததை ஒரு தவறு என கூறினார். அதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். இது ஒரு நல்ல முன்மாதிரி ஆகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் அரசியல் தவறுகள் செய்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி தவறு செய்துள்ளது. எமது ஜனநாயக மக்கள் முன்னணி தவறு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு செய்துள்ளது. இந்த கருத்தை இங்கே கூடியுள்ள எல்லா கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன். நாம் அனைவரும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன் செல்வோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று இங்கே பலர் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில் கூட்டமைப்பு, பொது வேட்பாளர் தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அவர்கள் ஒரு அவசரப்படாத கொள்கையை கடைபிடிக்கின்றார்கள் என எண்ணுகின்றேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஒரு விடயத்தை மாத்திரம் இதுவரையில் தெளிவாக கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தல்களின் போது இந்நாட்டில் எவருக்கும் இனவாதத்தை கிளப்ப தாம் இடமளிக்க போவதில்லை எனக்கூறியுள்ளார். இது பாராட்டி வரவேற்கவேண்டிய நல்ல ஒரு பொறுப்புள்ள நிலைப்பாடு என எண்ணுகின்றேன்.

இங்கு பேசிய சரத் பொன்சேகா, கடந்த முறை தான் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதனால் பெருந்துன்பங்களை எதிர்கொண்டதாக சொன்னார். தேர்தலின் பிறகு தன்னை அனைவரும் கைவிட்டு விட்டதாகவும் சொன்னார். உண்மைதான், பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும். எமது வேட்பாளர் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ, அவர் அதற்கு தயாராக வேண்டும்.

ஆனால், சரத் பொன்சேகா ஒன்றை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். அவர் கடைசியாக இழுத்து செல்லப்பட்ட தருணம் வரை நான் அவருடன் இருந்தேன். அவரை இந்த உலகிலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று கூறிய அதே அரசாங்கமே, அவரை இழுத்துக்கொண்டு போய் சிறையில் அடைத்தது. என் கண் முன்னால் இது நடந்தது. எனவே எதுவும் நடக்கலாம். நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைமைக்கு எதிராக, சோபித தேரர் இரண்டு வருடங்களாக நடத்திய தேசிய இயக்கத்தின் மூலமாக இன்று இந்த நாட்டின் பிரதான கட்சிகளை இணைத்து ஒரு பொது மேடைக்கு கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்கு நான் இந்நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன்.