செய்திகள்

19 ஆவது அரசியலமைப்பு நடைமுறைக்கு வர சிலகாலம் எடுக்கும்

முழுமையாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சட்டமாக அங்கீகரிப்பதற்கான சபாநாயகரின் கையொப்பம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வரை இடப்படவில்லை என்றும் அச் சட்டமூலம் சட்டமாக நடைமுறை வருவதற்கு இன்னும் சில காலம் எடுக்கக்கூடும் என்றும் பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்ட சட்டமூலம் இன்னும் சட்டவரைஞர் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படாமையே இதற்கு காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

பொதுவாக ஒரு சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டதை அடுத்து தான் அது சட்டமாக அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும். அந்த வகையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு குழுநிலையின் போது முக்கியமான பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டே பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நிறைவேற்றப் பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், குழுநிலையில் முன்வைக்கப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்ட அனைத்து திருத்தங்களும் உள்வாங்கப்பட்ட முழுமையான சட்டமூலமாக 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை வடிவமைப்பதற்காக சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றிய முமுமையான சட்டமூலம் நேற்று பிற்பகல் வரை சட்டவரைஞர் திணைக்களத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறிருப்பினும், முழுமை செய்யப்பட்ட சட்டமூலத்தின் சிங்கள மொழி பிரதியை நேற்று திங்கட்கிழமையும் தமிழ் மொழி பிரதியை இன்றும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சட்டவரைஞர் திணைக்களத்தினால் தெரிவிக்கப் பட்டிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. திருத்தங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு முழுமை செய்யப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கிடைத்ததும் அது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு சபாநாயகரினால் அதில் கையொப்பமிடப்பட்டதன் பின்னர் தான் அந்த சட்டமூலம் சட்டமாக அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் என்றும் மேற்படி வட்டராங்கள் தெரிவித்தன.

அந்த வகையில், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமாக நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில காலம் எடுக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களில் குறைப்பு, சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.