செய்திகள்

19 ஆவது திருத்தச் சட்ட்ம்: இன்று இரண்டாவது நாளாக விசாரணை

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்கள் நேற்றையதினம் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றின் விசாரணைகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனைவிட 5 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் ப்ரியசத் டெப் ஆகிய நீதியரசர்கள் குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜாதிக ஹெல உறுமய, மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில ஆகியோரின் மனுக்களும் இதில் உள்ளடங்குகின்றன. 19வது திருத்தச்சட்டத்தை அனுமதிப்பதாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

முதலாவதாக சட்டத்தரணி கொமின் தயாசிறி தாக்கல் செய்யத மனுமீதான விசாரணை நடைபெற்றது. தனிநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 19வது திருத்தச்சட்டமூலம் அமைய வில்லையென்பதை கொமின் தயாசிறி தனது பிரதான வாதமாக முன்வைத்திருந்தார்.

தனிநபர்களுக்கு ஏற்படக்கூடிய துன்புறுத்தல்கள் மற்றும் ஜனாதிபதி யிடமிருந்த நிறைவேற்று அதிகாரம் பிறிதொரு நபருக்கு மாற்றப்படுதல் மற்றும் எந்தவொரு மோசமான அரசாங்க மாகவிருந்தாலும் சுமார் நான்கரை வருடங்கள் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது போன்ற விடயங்கள் 19வது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக் கப்பட்டிருப்பதால் சர்வஜனவாக் கெடுப்பொன்றுக்குச் சென்றே 19வது திருத்தச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

19வது திருத்தச்சட்டமூலம் தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரு மாதிரியும், சிங்கள மொழியில் வேறொரு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருந்தார். நான்கரை வருடங்களுக்குப் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. அவ்வாறு கலைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிங்களமொழியில் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எதனைச் சரியென எடுத்துக்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த காலங்களைவிட உச்சநீதிமன்றத்தில் சகல தரப்பினருடைய விவாதங்களும் உன்னிப்பாக செவிமடுக்கப்படுவதாகவும், இது தொடர்பில் பிரதம நீதியரசருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது சட்டத்தரணி கொமின் தயாசிரி தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் நான்காவது உறுப்புரையை 19வது திருத்தச்சட்டமூலம் மீறவில்லையென்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தானும் இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பின் 3வது உறுப்புரையை மீறுவதாயின் சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்குச் செல்லவேண்டும். 4வது உறுப்புரையை மீறுவதற்கு சர்வஜனவாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையெனக் கூறினார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் மக்கள் ஆணையின் மூலம் ஜனாதிபதி ஒருவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவதாயின் கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உதய கம்பன்பில தாக்கல் செய்த மனுசார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர்.டி.சில்வா வாதிட்டார். அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைக்கமைய ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரத்தை 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாக பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் வழங்குவதாயின் நிச்சயம் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் தகவல் அறியும் சட்டம் 19வது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த உதய கம்பன்பில சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் குறித்த தகவல்களை அறியும் உரிமை குறித்த எல்லைகளை பிறிதொரு சட்டத்தின்மூலம் உள்ளடக்குவதாக இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 19வது திருத்தச்சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பாக அமைந்துவிடும் என்றும் கூறினார். சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்பட்டால் 19வது திருத்தச்சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்கு தாம் தயாராக இருப்ப தாகவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றன.