செய்திகள்

19 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்: வர்த்தமான அறிவித்தல் இன்று

அரசியலமைப்புக்கான 19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வரைவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை  பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவையின் விஷேட அவசரக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது உள்ளிட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வழமையான முறையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அவசர சட்ட மூலமாக இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது எனவும், பாராளுமன்றம் நிறுவப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது, புதிய திருத்தங்களின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் செல்லும் வரையில் பாராளுமன்றை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் தொடர்பிலும் புதிய சட்டத் திருத்தங்களில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி படைகளின் தலைமைத் தளபதி, அமைச்சரவையின் பொறுப்பாளர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரங்கள் அவ்வாறே தொடர்ந்தம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவவ்வாய்க்கிழமை வெளியிடப்படவிருக்கின்றது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையிலும் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.