செய்திகள்

19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: நீதிமன்றம் தீர்ப்பு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடத் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் மாத்திரம் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்’ என்று சட்ட மா அதிபர்  யுவன்ஜன விஜயதிலக்க, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்த விசாரணைகள், நேற்று நிறைவடைந்தன. இந்நிலையில், இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. இந்நிலையில், இம்மனுக்கள் தொடர்பான சட்ட மா அதிபரின் கருத்துரையும் நேற்று நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவான், நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, பிரியசாத் டெப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

‘மேற்படி சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடத் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் மாத்திரம் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்’ என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்ட மா அதிபர்  யுவன்ஜன விஜயதிலக்க கொண்டுவந்தார்.

‘இந்த சட்டமூலத்தின் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக ‘ஜனாதிபதி’ குறிப்பிடப்பட்டுள்ளார். தேசிய ஒற்றுமையின் அடையாளமாக ‘தேசியக் கொடி’ இருக்கும் பட்சத்தில், ‘ஜனாதிபதி’யை அதற்கு ஒப்பிடுவது பிரச்சினைக்குரியதாகும். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சட்ட மா அதிபருக்கு, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபன் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அமைச்சரவையின் பிரதானியாக பிரதமரை முன்னிலைப்படுத்துவதால் ஜனாதிபதியிடமுள்ள நிறைவேற்று அதிகாரங்கள், குறைக்கப்படமாட்டாதா என்று கேள்வி எழுப்பிய நீதியரசர், மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை வேறொரு நபர் பயன்படுத்த இடமளிக்க முடியுமா என்றும் கேட்டதுடன் இவை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் சட்ட மா அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த சட்ட மா அதிபர், ‘உரிய சரத்துக்கள் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட மாட்டாது’ எனக் கூறினார். இதனையடுத்தே, இந்த சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு, சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று நீதியரசர் அறிவித்தார்.

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானம், சபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்படும் அதன் பின்னர், நீதிமன்றின் வியாக்கியானம் தொடர்பில் சபாநாயகரினால், நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும். இதனையடுத்து இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம், நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடுக்கப்படவிருக்கின்றது என்று பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.