செய்திகள்

19 ஆவது திருத்தப் பிரேரணையின் போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தமிழ்த்தேசம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது: ஆய்வாளர் யோதிலிங்கம்

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தப் பிரேரணையின் தமிழ்ப் பிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.ஆங்கிலப் பிரதி மட்டுமே வழங்கப்பட்டது.பிரபா கணேசன் மொழி புரியவில்லை எனச் சுட்டிக் காட்டிய போது ரணில் விக்கிரமசிங்க ‘நீ ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளினால் வென்றனீர்.வாயைப் பொத்திக் கொண்டிரு’எனக் கூறி அடக்கினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வளவுக்கும் வாய் திறக்கவில்லை.பிரபா கணேசனுக்கு ஆங்கிலமும் தெரியும்.சிங்களமும் தெரியும்.கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்கள் பலருக்குத் தான் ஆங்கிலம் தெரியாது.ஆனாலும் எவரும் வாய் திறக்கவில்லை.இங்கு உறுப்பினர்களுக்குக்குக் கட்டாயம் ஆங்கிலம் தெரிய வேண்டும் என நான் கூற வரவில்லை.ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதல்ல இங்குள்ள பிரச்சினை.தமிழ்மொழி ஒரு தேசிய இனத்தின் அடையாளம்.தமிழ்மொழியைப் புறக்கணித்ததன் மூலம் தமிழ்த் தேசம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் இங்குள்ள பிரச்சினை.

இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம்.அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

19 ஆவது திருத்தச்சட்டம் பல சம நிலைத் தடைகளைக் கொண்டு வந்திருக்கின்றது.இரு தடவை மட்டும் பதவி வகித்தல்,பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறல்,அடிப்படை உரிமைகள் மீதான வழக்குத் தொடுத்தல்,அரசியலமைப்புப் பேரவையின் அறிமுகம் என்பவை இவற்றில் முக்கியமானவை.அரசியல் கலப்பில்லாத சுயாதீனச் செயற்பாட்டிற்குத் திருத்தத்திலும் பெரிய வெளி இருக்கவில்லை.அரசியலமைப்புப் பேரவையின் அரசியல் வாதிகளின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது.சுதந்திர ஆணைக் குழுக்கள் பலவும் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.இவையெல்லாம் சிங்கள தேசத்தின் கவலைகள்.நமது கவலை அவையல்ல.19 ஆவது திருத்தத்தில் தமிழ்மக்கள் சம்பந்தப்பட்ட நலன்கள் எதுவுமில்லை என்பதே எமது கவலை.எமது தலைவர்களும் தமிழ்மக்கள் நலன் சார்ந்த விடயங்களைச் சேர்க்குமாறு கோரவில்லை.

இன ஒடுக்குமுறை உள்ளதொரு நாட்டில் அனைத்து அரச நிறுவனங்களும் பேரினவாத கண்ணோட்டத்திலேயே செயற்படும் என்பது தமிழ்மக்களுக்குக் கிடைத்த வரலாற்றுப் பட்டறிவு.இந் நிலையில் இன ரீதியான பாதுகாப்புப் பொறிமுறையைக் கேட்டிருக்கலாம்.தமிழ்மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ்மக்களிடமிருக்க வேண்டும் என வற்புறுத்தியிருக்கலாம்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்திற்கு உதவியது போலவே இது விடயத்திலும் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டது போலப் பங்களித்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார். யாழ்.நகர் நிருபர்-