19 ஆவது திருத்தம் ஐ.தே.க.வின் சதி முயற்சி: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் சதி முயற்சியின் ஊடாக கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சி செய்தே 19ஆவது திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
19ஆவது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் எதிர்க்கவுள்ளதுடன். அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் யோசனைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தொடர்ச்சியாக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையில் அது தொடர் பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த வாரம் நீதிமன்ற ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்ற கூட்டத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. எனினும் 19வது திருத்தச் சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதென்பதை இன்று அனைவரும் மறந்துவிட்டனர். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. அதேபோல் நாட்டின் ஒரு சில அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் நீக்கப்படவும் கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அப்போது இம்முறையின் அதிகாரங்களை சர்வதிகாரமாக பயன்படுத்தி நாட்டை சர்வதிகாரத்தின் பாதையில் கொண்டு சென்றுவிட்டார். இந் நிலையில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையினை ஜனநாயக முறமையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்திகின்றோம். எனவே 19 வது திருத்தத்தில் ஜனாதிபதி முைறமையின் அதிகாரங்களை முற்றாக நீக்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒத்துழைக்கப் போவதில்லை என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவுடன் அப் பதவிக்கு வரவில்லை, பாராளுமன்றமத்தின் பெரும்கபான்மை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் வசம் இருக்கையில் ரணிலை பிரதமராக மாற்றியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியேயாகும். ஆனால் இன்று 19 வது திருத்ததினுடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முழுமையாக பிரதமரின் கைகளுக்குள் கொண்டுவர ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கின்றது.
19 வது திருத்ததில் ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டுவராது, சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவது மட்டுமன்றி தேர்தல் முறைமையின் மாற்றம் கொண்டுவருவது என்ற மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினர் தேர்தல் முறைமையினை நீக்கிவிட்டு ஏனைய இரண்டு விடயங்களை மட்டுமே முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி முறையினை முழுமையாக நீக்கி ஜனாதிபதியை பொம்மைபோல் செயற்பட நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படுத்தி அதிகாரத்தினை தம் வசப்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளையே நாம் சதித்திட்டம் என கூறுகின்றோம்.
19 வது திருத்தம் பாராளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது அதற்கு எதிராகவே நாம் வாக்களிப்போம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதனை எதிர்க்கும். அதேவேளை 19 வது திருத்தத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவந்து ஜனாதிபதிக்கான ஒரு சில அதிகாரங்களை பலப்படுத்துவதே எமது திட்டம். அதற்கான சில யோசனைகளை 10 ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.