செய்திகள்

19 ஆவது திருத்தம் குறித்து 20 ஆம் திகதி விவாதம்: நிறைவேறியதும் பாராளுமன்றம் கலைப்பு

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்து எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். குழுநிலை விவாதத்தின் போது, அவற்றை அரசாங்கம் நீக்கிகொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே 19 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் 20 ஆத் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும்.