செய்திகள்

19 வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு 10 ஆம் திகதி நிறைவேற்றப்படும் நீதியமைச்சர் நம்பிக்கை

அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 8,9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

19 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு 7ஆம் திகதி சபாநாயகரினால் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிய வருகிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதற்கெதிராக 18 அமைப்புகள் மற்றும் நபர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவை பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன் தலைமையிலான 3 நீதியரசர் குழு முன்னிலையில் நேற்று முன்தினம் நேற்றும் ஆராயப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தேர்தல் திருத்தச் சட்டத்துடன் 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலே ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறிவந்தாலும் அடுத்த வாரம் 19 ஆவது திருத்தத்திற்கு சு.க ஆதரவு வழங்கும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார்.