செய்திகள்

19 வது திருத்தத்தைக் கொண்டுவருவதில் அரசுக்குப் புதிய சிக்கல்

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் சமர்ப்பிக்க முடியுமா என அரசதரப்பு ஆலோசித்து வருகிறது.

ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் அதற்குள் நிறைவேற்று அதிகார முறையை நீக்கிவிட வேண்டும் என்ற நிலையில் இப்புதிய சிக்கல் தோன்றியுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முதல் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக தேர்தல் முறைமை மாற்றத்தை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி 19ஆவது அரசியலமைப்புத் திருத்தமான ஜனாதிபதியின் அதிகார பகிர்வு குறித்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன். 21ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்.

ஆனால், அதற்கு முதல் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த சட்டமூலத்தை 20ஆவது அரசியலமைப்பு திருத்தமாக பாராளுமன்றில் சமர்ப்பித்தால் 19ஆவது திருத்தத்தை ஆதரிக்கலாம் என சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், 20ஆவது திருத்தத்தை சபையில் சமர்ப்பிக்க காலம் போதுமானதாக இல்லை. சுதந்திரக்கட்சியின் நிபந்தனையை ஏற்பதாக இருந்தால், 20ஆம் திகதியே 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தையும் சமர்ப்பிக்க முடியுமா என அரசதரப்பு ஆலோசித்து வருகிறது.

குறைந்த பட்சம் பாராளுமன்றில் சட்டமூலத்தை சமர்பித்தாவது ஆதரவை பெறவேண்டும் என்பதே அரச தரப்பின் நோக்கம் என தெரிய வருகிறது.