19 ஆவது திருத்தம்: ஆராய்வதற்கு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று
பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்காக இன்று திங்கட்கிழமை அமைச்சரவை அவசரமாகக் கூடவுள்ளது.
பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷமன் கிரியெல்லவிடம் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்காகவே மக்கள் ஆணை வழங்கினர்.
அதனை அரைவாசியாக குறைப்பதற்கு ஆணைகிடைக்கவில்லை. ஐ.தே.கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் இதனையே பிரசாரம் செய்தது. எனவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். இன்று நாம் வழங்கிய உறுதிமொழிகளை மீற முடியாது.
அதிகாரங்களை குறைப்பதல்ல நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதே எமது கொள்கையாகும்.
இதற்காகவே 19ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக இன்று திங்கட்கிழமை அமைச்சரவை அவசரமாகக் கூடவுள்ளது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.




