செய்திகள்

2 நாள்களில் 2 லட்சம் பிரதிகள்: சச்சின் புத்தகம் சாதனை!

சச்சினின் சுயசரிதை புத்தகமான ’பிளேயின் இட் மை வே’ விற்பனையில் சாதனை படைத்து சச்சினுக்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளது.

இந்த புத்தகம் சமீபத்தில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பே 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டன. புனைவு மற்றும் புனைவில்லாத எந்த புத்தகத்துக்கும் இந்தளவுக்கு முன்கூட்டியே வரவேற்பு கிடைத்ததில்லை.

அந்த விதத்தில் சச்சினின் சுயசரிதை புத்தகம், சாதனை படைத்துள்ளதாக ஹாச்செட் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வால்டர் இசாக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் 1 லட்சத்து 30 ஆயிரம் பிரதிகள் விற்றுள்ளது. அந்த சாதனையை சச்சினின் புத்தகம் முறியடித்துள்ளது.

புத்தகம் வெளியான 2 நாட்களில் 2 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நூலை எழுதிய கிரிக்கெட் விமர்சகரான போரியா மஜூம்தார் இதுபற்றி கூறும்போது, “ரசிகர்கள் சச்சினைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். சச்சினின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் இந்த புத்தகம் ஏற்கப்பட்டுள்ளது.” என்கிறார்.