செய்திகள்

2–வது தகுதி சுற்று ஆட்டம்: சென்னை–பெங்களூர் நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை ராஞ்சியில் 2–வது தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பையில் தோற்றது. இன்னொரு வாய்ப்பாக 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூருடன் நாளை மோதுகிறது. இதை பயன்படுத்தி கொள்வது அவசியம்.
மும்பைக்கு எதிராக சென்னை பந்து வீச்சு மோசமாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும். மேலும் துடுப்பாட்டத்தில் தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். சுரேஷ் ரெய்னா அதிரடியை வெளிபடுத்தினால் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும்.
கோலி தலைமையிலான பெங்களூர் அணி 3–வது இடத்தை பிடித்தது. அந்த அணி நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. கிறிஸ்கெய்ல் டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மேலும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதனால் சென்னை அணிக்கு எல்லா வகையிலும் கடும் சவால் கொடுக்கும். பெங்களூரை வீழ்த்த சென்னை அணி முழு திறமையை வெளிபடுத்த வேண்டும். டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் போட்டி நடக்கிறது. இதனால் சென்னை அணிக்கு அதிகளவு ஆதரவு இருக்கும்.