செய்திகள்

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு இன்று தீர்மானம்

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் இன்று இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முறைமைக்கு அமைய தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் அரசியல் கட்சிகளிடையே நேற்று வரை ஏற்பட்டிருக்கவில்லை என அறிந்து கொள்ள முடிகிறது.

குறித்த தேர்தல் முறைமைக்கு அமைய இரு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும், மற்றையதில் குறித்த எண்ணிக்கை 225க்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக இருக்கும் பட்சத்தில் அதில் 160 பேர் தொகுதிவாரி தேர்தல் முறைமை மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும், 225 ஆக அமையும் பட்சத்தில் 125 பேர் தொகுதிவாரி தேர்தல் முறைமை மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில், மேலும் தாமதமின்றி, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.