செய்திகள்

20ஐ பற்றி கவலைப்படாது பாராளுமன்றத்தைக் கலைக்கவும்: ஜே.வி.பி.

தேர்தல் மறுசீரமைப்பை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்றினாலும் சரி நிறைவேற்றாவிட்டாலும் சரி பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலின் மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். எனினும், காலத்தை மேலும் இழுத்தடித்து தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தை வைத்து தொடர்ந்தும் அரசு நடத்துவதற்கே பிரதான கட்சிகள் முயற்சிப்பதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

பிரதமருக்கோ, எதிர்க்கட்சித் தலைவருக்கோ தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அந்தந்தப் பொறுப்புக்களை வகிப்பதற்கு தகுதி இல்லை. 20ஆவது திருத்தச்சட்டமூலத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங் கத்துக்குள் இன்னமும் இணக்கப்பாடு இல்லை.

இதற்கு இன்னமும் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் இதனைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவர முடியாது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பாராளு மன்றத்தைக் கலைக்காது மேலும் காலத்தை இழுத்தடிக்கும் உத்தி கையாளப்படுவதாகவே உணர முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் உடனடியாகக் காலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், தேர்தலை முகங்கொடுப்பதற்கு ஏதுவாக ஆரம்பகட்டப் பணிகளைத் தமது கட்சி ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.