செய்திகள்

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு நியமிப்பு

புதிய தேர்தல் முறையுடன் கூடிய 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதி இணக்கப்பட்டுக்கு வரவென அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சமர்பித்தார். அதன்போது சில அமைச்சர்கள் புதிய தேர்தல் முறையில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதன்படி அதுகுறித்து ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்துள்ளார். அந்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் சரத் அமுனுகம, எஸ்.பி.திஸாநாயக்க, பாட்டளி சம்பிக்க ரணவக்க, கபீர் ஹசீம், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியூதின் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர்.

இதேவேளை, காலாவதியாகியுள்ள உள்ளூராட்சி சபைகளை கலைத்து ஆணையாளர் ஒருவரை நியமிப்பது குறித்து நேற்று அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. காலாவதியான 234 உள்ளூராட்சி சபைகளையும் நாளை கலைக்கு விசேட ஆணையாளரின் அதிகாரத்திற்குள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.