செய்திகள்

20வது திருத்தம் அடுத்த வாரமே அமைச்சரவையின் அனுமதியை பெறும் : அமைச்சர் ராஜித

தேர்தல் திருத்தமான 20வது திருத்தத்திற்கான அமைச்சரவை அனுமதி அடுத்த வாரமே மேற்கொள்ளப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி , பிரதமர் , சிறிய கட்சிகள் மற்றும் தேர்தல் திருத்தம் தொடர்பான அக்கரையுள்ள பிரிவினரை உள்ளடக்கிய குழு வொன்றை அமைத்து அதனூடாக தீர்மானமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் அமைச்சரவையில் அதனை சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு யோசனையை முன்வைத்தார் . அது  15 விடயங்களை உள்ளடக்கியது. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களை 255 ஆக உயர்த்தும் யோசனை முக்கியமானது.
இவ் வேண்டுகோளானது எந்தவொரு அரசியல் கட்சியிடமோ அல்லது தனிநபரிடமிருந்தோ வந்த வேண்டுகோள் இல்லை. அதற்கு மாறாக பல சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவளித்து இடமளிக்கும் முகமாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மசோதாவானது அமைச்சரவை துணை குழுக்களின் தொகுக்கப்பட்ட அறிக்கையின் மூலமே தீர்மானிக்கப்படும். ஆகவே தான் பாராளுமன்றத்தில் தற்போதுள்ள 225 ஆசனங்களை 255 ஆக உயர்த்துவதற்கு ஆலோசனைகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றுள்  165 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏக முறைமை அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் மற்றும்  எஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேசிய பட்டியலில்  நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாராளுமன்றில் மேலும் பரிந்துரைகளை அதிகரிப்பதன் மூலம் அதிக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இது சம்பந்தமாக இறுதி வரைவு மசோதா கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர், ஏனைய சிறுபான்மை கட்சிகள் மற்றும் பல்வேறு அமைச்சரவை பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்று இறுதி மசோத அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் சேர்ந்து இது சம்பந்தமாக தனியான ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.