செய்திகள்

20 ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் சிறுபான்மை சமூகத்தினைப் பாதிக்காத வகையில் கொண்டு வரப்பட வேண்டும்! கிழக்கு முதலமைச்சர் (படங்கள்)

20 ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் இந்த நாட்டில் தேர்தல் முறை மாற்றம் கொண்டு வரப்படும் போது அது ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினையும் பாதிக்காத வகையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் இந்த நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த காலத்தில் பல பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு புதிய வாழ்வினை கட்டியெழுப்புகின்றதற்கான தலைவர்களாக நாங்கள் இருக்க வேண்டும். 35 வருட கால துன்பங்களை நாங்கள் மறந்து விட்டு எதிர்கால செயற்பாடுகளை நாங்கள் கொண்டு செல்ல முடியாது.

அரசியலுக்காக திட்டமிட்டு நாங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு அவ்வாறான சதிதிட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாதவாறு தலைவர்கள் இருக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன். கிழக்கு மாகாணசபையில் இது தொடர்பில் உணர்ந்து நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

ஒரு மாறுபட்ட அராஜக நிலையில் இருந்து விடுபட்டு அனைவரும் விட்டுக் கொடுப்புடன் கிழக்கு மாகாணசபையில் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

நாங்கள் முன்னுதாரணமாக இவ்வாறான விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதே போன்று அதிகார மட்டத்திலும் இந்த நிலையேற்பட வேண்டும் என கருதுகின்றோம்.

ஆதிகாரிகள் இன வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்கு மாகாணம் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படும் போது அங்கு மக்களுக்கு சிறந்த தீர்வினை வழங்கக் கூடியதாக இருக்கும்.

கட்டிடங்கள் கட்டுவதனால் மட்டும் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. எங்களுக்குள் மாற்றம் ஏற்படும் போதே அந்த கட்டிடங்களினால் மாற்றங்களை காண முடியும்.

இன்று இருக்கின்ற பிரச்சினை அரசியல்வாதிகளும் அல்ல மக்களும் அல்ல. அதிகாரிகளாகும். அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். பலர் கடந்த 35 வருடங்களை எவ்வாறு கடத்தி வந்தார்களோ அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் மனங்களில் இருந்து கசப்புணர்வுகள் நீங்கவில்லை. இன வேறுபாடுகள் பார்க்கும் நிலை அங்கும் உள்ளது.

மக்களுக்கு சேவை செய்கின்றவர்களாக அதிகாரிகள் மாற வேண்டும். அரசியல்வாதிகள் மட்டும் சேவையாற்றுவதற்கான சூழ்நிலை ஏற்படுமானால் அதனை அவர்களால் சரியாக செய்ய முடியாது.

இன்று தமிழ் மக்கள் இணைந்து ஒரு நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் இன்று தான் நாங்கள் சமாதானக் காற்றினை சுவாசிக்க முடிகின்றது.

இந்த ஆட்சியை மாற்றிய பொறுப்பு ஒட்டுமொத்தமாக இந்த சிறுபான்மை சமூகத்துக்கு உள்ளது. ஒட்டுமொத்த இலங்கைக்கு நல்லாட்சியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அவ்வாறான நிலையில் அதன் பலாபலன்களை பெற்றுக் கொள்வதற்காக விட்டுக் கொடுப்புடனான அரசியலை, ஒரு தீர்வினை பெற்றுக் கொள்கின்ற அரசியல் கலாசாரத்தினை முன்னெடுக்க வேண்டும்.

ஒரு நல்லாட்சிக்குள் சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அதனை நல்லாட்சி என்று கூறுவதில் எந்த பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அரசியல் தீர்வினை நோக்கியதாக எங்கள் காய்களை நகர்த்த வேண்டும்.

அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் நாங்கள் முன்கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் நாங்கள் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாரில்லை.

இந்த நல்லாட்சியில் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவுள்ளோம். இந்த நாட்டில் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு அதிகார அராஜகமும் இங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

20வது தேர்தல் திருத்தச்சட்டம் மூலம் இந்த நாட்டில் தேர்தல் முறைமாற்றம் கொண்டு வரப்படும் போது அது ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினையும் பாதிக்காத வகையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் இந்த நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருகின்றன.

நீதியான நேர்மையான சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்கின்ற அவர்களினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

Hapees

IMG_0008

IMG_0017

IMG_0025

IMG_0030

IMG_0038

IMG_0055