20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சமியின் டாஸ் அதிர்ஷ்டம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், இங்கிலாந்தும் கோதாவில் இறங்கின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
* இந்த உலக கோப்பையில் தங்கள் அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி டாஸ் ஜெயித்திருக்கிறார். அத்துடன் எல்லா முறையும் அவர் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் 20 ஓவர் அணியின் கேப்டனாக அவர் தொடர்ந்து 10 ஆட்டங்களில் ‘டாஸ்’ வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
* தனது 50-வது சர்வதேச 20 ஓவர் போட்டியில் களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தது, வாணவேடிக்கையை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
* இந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய வெஸ்ட்இண்டீஸ் வீரர் மர்லன் சாமுவேல்ஸ், 2012-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் அரைசதம் (78 ரன்) அடித்திருந்தார். இதன் மூலம் உலக கோப்பை இறுதிசுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே இலங்கையின் சங்கக்கரா 2009 மற்றும் 2014-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் அரைசதம் எடுத்திருக்கிறார்.

* இந்த தொடரில் 2 அரைசதம் உள்பட 249 ரன்கள் எடுத்துள்ள ஜோ ரூட், ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கெவின் பீட்டர்சனிடம் (2010-ம் ஆண்டு உலக கோப்பையில் 248 ரன்கள்) இருந்து தட்டிப்பறித்துள்ளார்.
* இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் எடுத்த 85 ரன்களே, 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாகும். முந்தைய சாதனையும் அவரது வசமே (78 ரன்) இருந்தது.