செய்திகள்

20 ஓவர் உலக கோப்பை மகுடம் யாருக்கு? வெஸ்ட் இண்டீஸ்–இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன.16 அணிகள் பங்கேற்ற 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 8–ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. இதில் முதல் சுற்றின் முடிவில் 6 அணிகளும், சூப்பர்–10 சுற்று நிறைவில் 6 அணிகளும் வெளியேறின. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் சாய்த்து இறுதி சுற்றை அடைந்தன.இந்த நிலையில் உலக சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

239241

மெகா அதிரடி பட்டாளத்தை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், லென்டில் சிமோன்ஸ், ஜான்சன் சார்லஸ், சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அபாரமான பார்மில் உள்ளனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் இவர்களில் யாராவது ஒருவர் முத்திரை பதித்ததாலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தகைய நிலையை எட்டியிருக்கிறது.இதே உத்வேகத்தை இறுதி ஆட்டத்திலும் காண்பிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தங்களை தயார்படுத்தி இருக்கிறார்கள். அந்த அணியின் இன்னொரு ‘பிளஸ்–பாயிண்ட்’ சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ ஆவார். இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஓவருக்கு சராசரியாக 5.68 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ளார்.

இங்கிலாந்து எப்படி?

இங்கிலாந்து அணியையும் எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்தை யாரும் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதுவே அவர்கள் எழுச்சி பெற உதவியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் ஒரே பாணி ஆக்ரோஷம் தான். முதல் ஓவரில் இருந்தே அச்சமின்றி அடித்து நொறுக்க வேண்டும் என்ற மனநிலையுடன் ஆடுகிறார்கள். அதனால் தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ரன்கள் இலக்கை இங்கிலாந்தால் சேசிங் செய்ய முடிந்தது.ஜோ ரூட் (195 ரன்), ஜாசன் ராய் (183 ரன்), ஜோஸ் பட்லர் (155 ரன்) ஆகியோர் அந்த அணியின் தூண்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நிலைத்து விட்டாலும், இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறி விடும். ஏற்கனவே லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மண்ணை கவ்வியிருந்தது. அதற்கு இறுதி ஆட்டத்தில் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ahead of tomorrrow's ICC World Twenty20 India 2016 Final between England and West Indies at Eden Gardens on April 2, 2016 in Kolkata, India.

பரிசு எவ்வளவு

இங்கிலாந்து 2010–ம் ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012–ம் ஆண்டிலும் உலக கோப்பையை ருசித்துள்ளன. ஆக யார் வென்றாலும் 2–வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சிறப்பை பெறும். இரு அணிகளிலும் அதிரடி நாயகர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து அணி இதுவரை வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தும் அணிக்கு ரூ.23½ கோடியும், 2–வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

239239

மழை வாய்ப்பு?

இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கலாம். பகலில் மழை பெய்வதற்கு 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும், இரவில் 10 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈடன்கார்டன் மைதானம் 66 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கக்கூடிய சவால் நிறைந்த ஆடுகளமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ‘டாஸ்’ வெல்லும் அணி இரண்டாவது பேட் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களிலும் டாஸ் ஜெயித்து 2–வது தான் பேட் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், லென்டில் சிமோன்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், ராம்டின், வெய்ன் பிராவோ, டேரன் சேமி (கேப்டன்), பிராத்வெய்ட், சுலிமான் பென், பத்ரீ,

இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட்.