செய்திகள்

20 க்கு கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு இல்லை காலத்தை கடத்தாது பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்கின்றது ஐ.தே.க

தேர்தல் திருத்தத்திற்கான 20வது அரசியலமைப்பு திருத்த விடயத்தை வைத்து ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அடங்கலாக எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தை கலைக்கவிடாது இழுத்தடிப்பு செய்து அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகளில் ஈடுபட்டுவருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் ஏற்படவில்லையெனவும் இனியும் இணக்கப்பாடு ஏற்படும் என எதிர்ப்பார்க்க முடியாதெனவும் இதனால் காலம் கடத்தாது பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று ஶ்ரீ கொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்   கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் அமைச்சரான லக்‌ஷ்மன் கிரியெல்லவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் திருத்தத்திற்கு இது வரை கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. அவ்வாறு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை கிடையாது. 20வது திருத்தத்தை காட்டி பாராளுமனறத்தை கலைக்க விடாது தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சிகளே இடம்பெறுகின்றன. பாராளுமன்றத்தை கலைக்க விடாது அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொள்கின்றனர். இதற்கு இடமளிக்க மாட்டோம். வீனாக காலத்தை இழுத்தடிக்காது பாராளுமன்றத்தை கலைக்க இடமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த பாராளுமன்றம்  மஹிந்த ராஜபக்‌ஷ அமைத்தது இப்போ புதிய ஜனாதிபதி இருக்கின்றார் இதன்படி பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.