செய்திகள்

20 தமிழர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை இல்லை: மத்திய அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில், ”ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ஆந்திர அரசு அளித்துள்ள அறிக்கையில், ‘சேஷாசலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்வதை காவல்துறையினர் பார்த்திருக்கின்றனர். இதையடுத்து, கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் பயங்கர ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக, சந்திரகிரி காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்துள்னர். இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சில உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, இது போலி என்கவுன்டர் என்று கூறமுடியாது. இந்த பிரச்னையில் விசாரணை கமிஷன் அமைக்க ஆந்திர அரசிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது” என்றார்.