செய்திகள்

20 பலவந்தமாக திணிக்க முற்பட்டால் நாம் எதிர்ப்போம்: அமைச்சர் ஹக்கீம் அறிவிப்பு

உலகில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இவ்வாறு மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. தாங்களாகத் தயாரித்து விட்டு அதனை பலவந்தமாக திணிக்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் 20ஆவது சட்டத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பிரகாரம் கொண்டு வரப்பட்டால் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெறவிடாமல் நாங்கள் தடுப்போம். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்க மாட்டாதென நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றோம்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் கண்டியில் தெரிவித்தார்.

கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் 2015 – 2030 வரையான செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணத்தையும், செயலமர்வையும் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பின்னர் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த நாட்களில் அரசியல் குழப்ப நிலை பற்றிதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மல்வத்தை, அஸ்கிரிய தேரர்கள் கூட அரசியல் நிலைமை காரணமாக நாட்டில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் மோதிக் கொள்வதுதான் மிச்சம் என்றவாறு கூறுமளவிற்கு நிலைமை மோசமாக இருக்கின்றது.

மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இன்றைய சிக்கலான அரசியல் சூழ்நிலையைப் பற்றித்தான் பேசுகின்றார்கள். ஆகையால் உங்களிடமிருந்து இது பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றோம் என்று ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வியொன்று எழுப்பினார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முன்பு எங்களோடு மேற்கொண்ட சுமுகமான கருத்துப் பரிமாற்றங்களும் நல்லெண்ணத்து டனான அணுகுமுறையும் 20ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை கடைப் பிடிக்கப்படவில்லை என்பது உண்மை யிலேயே எங்களுக்கு கவலையளிக்கிறது.

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஜனாதிபதிக்கும் மிக அழுத்தமாகத் தெரிவித்த பின்னர் 20 ஆவது திருத்தம் வர்த்தமானியில் அவசர அவசரமாக பிரசுரிக்கப்பட்டிருப்பதை மீளப்பெற வேண்டுமென நாங்கள் வற்புறுத்த இருக்கிறோம். சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் சேர்ந்து இந்த 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கத் தீர்மானித்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போடும் ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளோடு நாங்கள் கருத்து ஒற்றுமைக்கு வந்திருக்கின்றோம்.

நாடு முழுவதிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயாராகி வருகின்றோம். இது சம்பந்தமாக மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்களையும் நாங்கள் எல்லாக் கட்சிகளும் சேர்ந்து நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

எங்களது யோசனைகளையும் உள்வாங்கிய பின்னர் வர்த்தமானியில் பிரசுரித்திருக்கலாம். பின்னர் பார்க்கலாமென்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.