செய்திகள்

20 வருடங்களின் பின் வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை தற்காலிக இடத்தில் ஆரம்பம் (படங்கள்)

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் மீள்குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்ட வலி.கிழக்கைச் சேர்ந்த வலி.கிழக்கைச் சேர்ந்த அச்சுவேலி வளலாய் பிரதேசத்தைச் சேர்ந்த வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை 20 வருடங்களின் பின் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கட்டடமொன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 21 மாணவர்களுடன் மீள ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையை வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி மூர்த்தி,பா.கஜதீபன்,வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்,வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார்,யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர்,பெற்றோர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த 1882 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை தரம் ஒன்று தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரையான மாணவர்களுக்குக் கல்வி புகட்டி வந்தது.அந்தக் கால கட்டத்தில் வளலாய்,தம்பாலை,அச்சுவேலி பத்தமேனி பகுதிகளிலுள்ள மாணவர்கள் இங்கு அதிகமாகக் கல்வி கற்று வந்தனர்.

யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த குறித்த பாடசாலை ஆவரங்கால் மகாஜனா பாடசாலையுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது.1995 ஆம் ஆண்டு யாழில் மக்கள் மீளக்குடியேறிய போது இந்தப் பாடசாலை முழுமையாகச் சேதமாக்கப்பட்டிருந்தது.
2012 ஆம் ஆண்டு அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட போதும் பாடசாலை ஆரம்பிக்கப்படவில்லை.குறித்த பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுவிக்கப்பட்டிருந்த போதும் அது சாத்தியமாகவில்லை.

இந்த நிலையில் கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் இப் பாடசாலை தற்காலிக இடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாடசாலையின் சொந்தக் கட்டடடம் யுத்தத்தால் கடுமையாகச் சேதமடைந்த போதிலும் அதைப் புனரமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தற்காலிக இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலையை இயங்க வைப்பதற்குப் போதியளவு வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.இந்த நிலையில் வடமாகாணக் கல்வியமைச்சு மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகளுக்கான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ( யாழ் நிருபர் )

unnamed (9) (1) unnamed (18) unnamed (19) unnamed (21) unnamed (22)