செய்திகள்

20 ஆசனங்களைப் பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக கூட்டமைப்பு வரவேண்டும்: சம்பந்தன்

பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை வலியுறுத்தினார். வவுனியாவில் நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இம்முறை 2 ஆசனங்கள் குறைக்கப்பட்டிருப்பதால் 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம்பேசும் சக்தியாக கூட்டமைப்பு காணப்பட வேண்டும். இதற்கு சகல மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது அவசியம் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

ஜனநாயக சூழ்நிலையில் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பதால் இது முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சிக்கின்றன. இவற்றை முறியடித்து பலமான நிலையில் பேரம்பேசும் சக்தியாக இருந்தாலே அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அடுத்துவரும் அரசாங்கத்துக்கு அழுத்தங் கொடுக்க முடியும் என்ற கருத்தும் இக்கூட்டத்தில் கூறப்பட்டதாக அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களில் வெளியிடுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவுள்ளது. இதனைவிட தமிழர்களின் அன்றாடப் பிரச்சினை மற்றும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களைக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.