செய்திகள்

2009 இற்கு பின்னரான தமிழ் மென்சக்தி

மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடைபெற்ற தடம்மாறுகிறாதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வு நிலை, கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வுவில் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் ஆற்றிய உரை:

மன்னார் மாவட்டத்திற்கு ஏதேவொரு முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை முதலில் கூறியாகவேண்டும். முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வாறாதொரு சந்திப்பு இம்மண்ணில் நடத்தப்பட்டிருந்தது. பெருமளவில் கட்சிப்பிரதிநிதிகள் சந்தித்துக்கொண்ட ஒரு சந்திப்பாகவிருந்தது. அந்த சந்திப்பின் நிறைவில் தமிழ்த்தேசிய பேரவையொன்றை உருவாக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்படியொன்று நடவக்கவில்லை. தற்போது அந்த சந்திப்பின் விரிந்த வடிவமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 2009இற்குப் பின்னர் தமிழ்த் தேசியப் பரப்பில் இவ்வாறானதொரு சந்திப்பு முதற்தடவையாக நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்தும் ஒரு சந்திப்பாகவுள்ளது. ஈழத்தமிழ்ப்பரப்பில்  மென் சக்தி பற்றிய உரையாடல் என்பது பலத்தின்பாற்பட்டதா? பலவீனத்தின் பாற்பட்டதா? என்றொரு கேள்வியை முதலாவதாக கேட்கப்பட்டுள்ளது. ஒரு வன்சக்தி வெற்றிடத்திலிருந்து தான் மென்சக்தி பற்றி உரையாடுகின்றோம். மென்சக்தி பற்றி என்னுடைய விளக்கத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்போகின்றேன்.

மென்சக்தி பற்றி உலக அனுபவம்

ஜோசப் நை எனப்படும் அமெரிக்க அரசாய்வியலாளர் மென்சக்தி என்ற வார்த்தையை கோர்க்கின்றார். அமெரிக்கா கெடுபிடிப்போரின் இறுதியில் உலகின் ஏகபோகவல்லரசாக எழுச்சி பெற்றிருந்த பின்னணி. அத்தகைய காலப்பகுதியில் அரசறிவியல் பதமாக மென்சக்தி பிரயோகத்திற்கு வருகின்றது. ஆனால் பிந்திய தாசப்தங்களில், குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க மற்றும் மேற்கத்தேய வெளியுறவுக்கொள்கைகளில் பொது இராஜந்திரதுறையில் அதிகம் பிரயோகிக்கப்படும் ஒரு வார்த்தையாகவும் நடைமுறையாகவும் மாறிவிட்டது.

படைத்துறை, பொருளாதாரம் இரண்டும் வன்சக்தி. இரண்டின் மூலமும் நாம் எதையாவது செய்யப்போகின்றோம் என்றால் பலப்பிரயோகம் செய்கின்றோம். பலப்பிரயோகத்தின் மூலம் ஒன்றை நாம் பெறுகின்றோம் என்றால் அது வன்சக்தி. பலப்பிரயோகம் செய்யாது ஏதையாவது பெறுகின்றோம் என்றால் அது மென்சக்தி. எங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதில் இருந்து மென்சக்தி உருவாக்கின்றது. மற்றவர்கள் எம்மீது கொண்டிருக்கும் ஈர்ப்பு சக்தி. எமக்கிருக்கும் வசிய சக்தி. அது பலப்பிரயோகத்தால் வருவதல்ல. பலம் பிரயோகித்து அதனைப் பெறமுடியாது என்று அமெரிக்க அரசாய்வியலாளர் ஜோசப் நை கூறுகின்றார்.

உதாரணமாக வத்திக்கானை கூறலாம். ஒருமுறை சோவியத் தலைவர் ஸ்டாலின், வத்திகானிடம் எத்தனை படையணிகள் உண்டு எனக் கேட்டார். வத்திக்கானிடம் படையணிகள் கிடையாது. உலகில் மிகச்சிறிய அரசு. உலகில் மிகப்பெரிய மென்சக்திகளில் அதுவொன்று. படையணிகளை வைத்திருக்காமலேயே உலகத்தை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருக்கின்றது. எப்படி? புனிதர்களின் சிலுவைப்பாடுகள் ஊடாக அந்த ஈர்ப்பு சக்தியை தன்னை நோக்கி கட்டியெழுப்பியுள்ளது. தனக்கு சரியெனப் பட்ட ஒன்றுக்காக சிலுவையில் அறையப்படவும் இரத்தம் சிந்தவும் புனிதர்களின் நூற்றாண்டுகால வியாபத்துக்கூடாகவும் கட்டியெழுப்பட்டதுதான் வத்திகானின் மென்சக்திக் கவர்ச்சி.

அமெரிக்காவை ஏகபோகவல்லரசு எனக் கூறுகின்றோம். ஆனால் வியட்நாமில் வெல்லமுடியவில்லை நாம் உலகின் ஏகபோக வல்லரசாக வந்தபின்னர் தான் அல்குவைதா செப்டம்பர் 11 தாக்குதலைச் செய்தது. என ஜோசப் நை கேள்வியெழுப்புகின்றார். வன்சக்தியால் தன்னை பாதுகாக்க முடியவில்லை என்பதை தான் இது காட்டுகின்றது என்பதை தான் ஜோசப் நை சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசாக வந்த பின்னரும் கூட தன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க முடியாதிருக்கின்றது. அமெரிக்காவின் எதிரி எங்கோவொரு தொலைதூர அரபுக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றான். எங்கோவொரு குகைக்குள் இருந்து வெடிகுண்டை சுமந்து கொண்டு அமெரிக்காவை நோக்கி வருகின்றான். அவனை எவ்வாறு தடுப்பது என்று ஜோசப் நை கேள்வியெழுப்புகின்றார். எமது பாதுகாப்பு கட்டமைப்பு அதனை தடுக்கமுடியாது இருக்கின்றது. ஆகவே எமது வன்சக்தியின் இயலாமையை ஒத்துக்கொள்கின்றோம் என்கிறார் ஜோசப் நை.

வன்சக்தியின் போதாமையை உணர்ந்து கொண்டு தன்னைப் பாதுகாப்பதற்காக உருவாக்கியது தான் மென்சக்தி. வன்சக்தியின் ஓட்டைகளுக்குள்ளால் எம்மை தாக்குவதற்கு எதிரிகள் வந்து விடுவார்கள். அதனை தடுப்பதற்காக நாம் நண்பர்களான ஒரு பாசத்தை உருவாக்குவோம் அந்த நண்பர்கள் அமெரிக்காவை தாக்க கூடாது. அதுவொரு ஜனநாயகத்தின் இதயம். கொலிவூட்டின் மையம். அங்கிருந்துதான் நாம் ரசிக்கும் கலை வருகின்றது. எமது பிள்ளைகள் அங்கே கற்கின்றார்கள் எனக் கூறும் நண்பர்களை உற்பத்தி செய்வோம். எங்கள் மீது ஈர்ப்புக்கொண்ட, நாம் வசீகரிக்க வல்லவொரு உலகத்தை உருவாக்குவோம். அதன் மூலம் எமது மென்சக்தியை அதிகரிக்கலாம். அதன் மூலமே வன்சக்தி பாதுகாக்க முடியாத ஓட்டைகளை அடைக்க முடியும் என ஜோசப் நை கூறினார்.

அது செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு பின் அமெரிக்காவுக்க ஏற்புடையதொரு கோட்பாடாக அது மாறியது. இன்னும் சிறப்பாகச் சொன்னால், சிவப்பு ஆபத்தை எதிர்கொண்ட அமெரிக்கா ஏகபோக வல்லரசாக இருந்தபோது பச்சை ஆபத்து வந்தது. அது தான் இஸ்லாமிய தீவிரவாதம்.  சிவப்பு ஆபத்து அதிகபட்சம் அரசுகளிடமிருந்தான் வந்தது. பச்சை ஆபத்து அரசற்ற தரப்புகளிடமிருந்து வந்தது. அதனை அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள்ளால் மட்டும் கையாள முடியவில்லை. எனவே தான் அமெரிக்கர்கள் மென்சக்தி பற்றி சிந்திக்கத்தொடங்கினார்கள். ஆகவே மென்சக்தி என்ற வாதம் அமெரிக்காவிலேயே ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு தான்.

வன்சக்தியின் போதாமையிலிருந்துதான் மென்சக்தி பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். உதாரணமாக ஆப்கான் தலிபான்களிடத்திலிருந்து மீட்கப்பட்டதன் பின்னர் இந்திய அமைச்சர் ஆப்கானிற்குச் சென்றார். அவர் பொலிவூட் சினிமா இறுவெட்டுக்களையே கொண்டு சென்றார்.

கொலிவூட்டில் என்ன உற்பத்தி செய்யப்படுகின்றதோ அது உலகம் முழுவதிலும் எங்கள் மீதான அபிப்பிராயத்தை தீர்மானிப்பதாக உள்ளது எனக் கூறும் ஜோசப் நை ஒரு மென்சக்தியை கட்டியெழுப்பும் அடிப்படை மூலக்கூறுகள் என மூன்று பிரதான விடயங்களை அடையாளம் காண்கிறார். சமுகத்தின் பண்பாட்டுச் செழிப்பு, சமுகத்தின் அரசியல் நாகரீகச் செழிப்பு, கலை இலக்கிய சமுக வெளிப்பாடு ஆகிய மூன்றுமே அவையாகும்.

எனவே நாம் இந்த விளக்கத்தின் பின்னணியை வைத்தப்பார்ப்போமாகவிருந்தால் அமெரிக்கர்களின் நோக்கு நிலையில் மென்சக்தி எனப்படுவது வன்சக்திகளின் போதாமைகளின்; விளைவே. தங்களது மென்சக்தியை உலகம் முழுவதும் பரப்புவதன் மூலம் தமது விருப்பத்திற்கேற்ப உலகத்தை வடிவமைக்கலாம் என அமெரிக்கர்கள் நம்புகின்றார்கள். இருப்பினும் ஜோசப் நை   அதனையும் கேள்வியெழுப்புகின்றார்.  ஒரு கொலிவூட் படத்தை பார்க்கும்   ஒரு   கொலிவூட் திரைப்படத்தை பார்க்கும்   கீழத்தேயவர் அமெரிக்காவின் ஜனநாயகச் செழிப்பை இரசிப்பாரா? அல்லது   தன் இலட்சியத்தில் விட்டுக்கொடுப்பின்றி இருப்பாரா?

இதற்கு எங்களிடத்திலேயே உதாரணம் உண்டு. நாலாம் கட்ட  ஈழப்போரின்போது   விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கொலிவூட் படத்தை ஏறக்குறைய  ஆறு தடவைகளுக்கு  குறையாமல் பார்த்ததாக கூறுகின்றார்கள். திரி   கண்ரட் எனப்படுகின்ற கொலிவூட் படமே அதுவாகும்.    மன்னன் லியோவைப்பற்றியது.   சரணடைவதா? இல்லை வீரமாகச் சாவதா? என வருகின்றபோது சரணடையாமை என்ற முடிவுக்குப் போகின்றான் மன்னன் லியோ.  முந்நூறு படைவீரர்களைக் தெரிந்து எடுத்துக்கொண்ட மன்னன் லியோ  தோல்வி நிச்சயம் எனத்தெரிந்து கொண்டும் மூன்று இலட்சம் பேர்சியப்படைகளுக்கு எதிராக யுத்தத்திற்குச் சென்றான். இக்கதையைக் கொண்டது தான்   திரி கண்ரட் படம். இத்திரைப்படம் 2008இல் வெளியாகியது. சிலமாதங்களிலேயே வன்னிக்கு வந்துவிட்டது.

ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமாரன் நான்காம் கட்ட ஈழப்போரின் போக்கு குறித்து விசனமுற்று    புலிகளின் தலைமைக்கு விண்ணப்பமொன்றைச் செய்தார்.  அதிலே தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வெளியுறவுக்கொள்கை மீளவரையப்படவேண்டும். அந்த வெளியுறவுக்கொள்கை வரையப்படுவதற்கு குழு உருவாக்கப்படவேண்டும்  என்றும் கோரினார். அந்தக்கோரிக்கைக்கு புலிகளின் தலைமையின் பதில்  என்ன தெரியுமா? திரிகண்ரட்  கொலிவூட் படம் தான் பதிலாக இருந்தது. கொலிவூட்   உற்பத்தியிலிருந்து அந்த இயக்கம் எதனைப்பெற்றுக்கொண்டது. சரணடையாது சாவடையும் மன்னன் லியோவின் வீரத்தை தான் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மாறாக அமெரிக்க கருதியது போன்று, இதுவொரு ஜனநாயக நாடு.  இவ்வாறான படங்களை உற்பத்தி செய்கின்றது. என்ற மென்சக்திக் கவர்ச்சியை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.  எனவே ஒரு சமுகம் தன்னுடைய பாதுகாப்பு, நிதிக்கட்டமைப்பு என்பவற்றுக்கு அப்பால் சில பலங்களை பெறவேண்டியுள்ளது. அந்த பலங்களை தான் மென்சக்தி என ஜோசப் நை கூறுகின்றார்.

இந்த நிலையில் மென்சக்தி பற்றிய சில முடிவுகளுக்கு வரமுடியும். அது அமெரிக்காவின் கருத்துவரும். ஏகபோக வல்லரசாக வளர்ச்சியடைந்த அமெரிக்கா தன்பாதுகாப்பை  உறுதிப்படுத்திக்கொள்வதற்காக தன்னுடைய இராஜதந்திர நிகழ்வுக்குள் உள்ளெடுத்துக்கொண்ட ஒரு பிரயோகம்.  வன்சக்தியின் போதாமை விளைவு. வன்சக்தியை அடித்தளமாக கொண்ட நாடுகள் தான் மென்சக்தி   பற்றி  சிந்திக்கின்றன.  இது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு விடயம். அதாவது வன்சக்தியை வைத்துக்கொண்டு தான் அவர்கள் மென்சக்தி பற்றி கதைக்கின்றார்கள்.  இதற்கு சிறந்த உதாரணம் ஜேர்மனியாகும்.

அண்மையில்  ஆபிரிக்காவில் நடைபெற்றது இனப்படுகொலையென ஜேர்மனி அறிவித்தது. அதனால் துருக்கியுடனான உறவுகளும் பாதிக்கப்பட்டன. ஆனால்  கடந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையை யூதர்களுக்க எதிராக ஜேர்மனியே செய்தது.   அதேநேரம்  ஆர்மீனிப் படுகொலையில் ஜேர்மனியும் மறைமுகப்பங்காளி.  எனவே  ஜேர்மனி தனது பாவக்கையை கழுவ முற்படுகின்றது. இதன்மூலம் தன்னை ஒரு மென்சக்தியாக உயர்த்திக்கொள்ள முயல்கின்றது. ஏனென்றால்   ஐரோப்பிய ஒன்றியத்தின் இராண்டாவது பெரும் பொருளாதார நாடாக ஜேர்மனி உள்ளது.  உலகத்தின் நான்காவது பெரியபொருளாதார நாடு ஜேர்மனி.  அதுமட்டுமல்ல சிரியா விடயத்தில் ஜேர்மனி மிகத்தாரளமாக நடந்துகொண்டது ஏன்?

ஏனென்றால் ஜேர்மனி தனது முகத்தை மாற்றிக்கொள்ள முற்படுகின்றது. கடந்த நூற்றாண்டில்  வன்சக்தியைப் பிரயோகித்து இந்த  உலகத்தின் மீது தனது ஆதிக்கத்தை பெறமுனைந்து தோற்கடிக்கப்பட்ட  ஒரு நாடு  இந்த நூற்றாண்டில் தன்னையொரு மென்சக்தியாக கட்டியெழுப்ப முற்படுகின்றது.  அதன் காரணத்தால் தான் அர்மீனிய இனப்படுகொலையை இனப்படுகொலையென பகிரங்கமாக அங்கீகரித்தது.     மிகமுக்கியமான கவனிக்கவேண்டியது ஜேர்மன் தன் வன்சக்தியை விட்டுக்கொடுக்கவில்லை.

பிரித்தானியா   உலகின் முதலாவது மென்சக்தி நாடென வர்ணிக்கப்படுகின்றது.  தன் வன்சக்தியை விட்டுக்கொடுக்கவில்லை. பிரித்தானியப் பிரதமர் கமரூன் பதவியிலிருந்து விலகி மிக எளிமையாக தனது வீட்டை விட்டு விலகிச்செல்வதை பார்க்கின்றோம் ரசிக்கின்றோம்.   புகழ்கின்றோம். ஆனால் பிரித்தானியா இந்த வளர்ச்சியை வன்சக்தி மூலம் தான் அடைந்தது.    கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்னைய நூற்றாண்டுகளிலும் கீழைத்தேய நாடுகளில் அவர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களின் மூலம் திரட்டப்பட்ட செல்வங்களின்  மூலமும் தான் பிரித்தானியா  தற்போதுள்ள வன்சக்தியை கட்டியெழுப்பியிருந்தது.

மென்சக்தி பற்றி கதைக்கும் இந்த நாடுகள் எல்லாம் வன்சக்தி அடித்தளங்களை கொண்டிருக்கின்றன. வன்சக்தி இறந்தகாலத்தினைக் கொண்டிருக்கின்றன.    வன்சக்தி இன்றி மென்சக்தி இல்லை என்ற நிலை தான் உண்டு.  ஸ்மாட் பவர் எனப்படுவது வன்சக்தியும் மென்சக்தியும் இணைந்தது தான் என ஜோசப் நை கூறுகின்றார். இதுதான் வன்சக்தி மென்சக்தி பற்றி உலகளாவிய படம்.    தற்போது எமது படத்திற்கு வருவோம்.

எமது நிலைமை என்ன? புலிகள் இயக்கம் தற்போது அரங்கில்   இல்லை. புலிகளை ஆதரிப்பது சட்டப்படி குற்றம்.   புலிகளின் பாடல்களை கேட்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் புலிகளை ஆதரிப்பவர்கள் இருக்கின்றார்கள். எல்லா ஆபத்துக்களையும் மீறி புலிகளின் அபிமானிகளாக இருக்கின்றார்கள்.  வன்சக்தியாக காணப்பட்ட இயக்கம் தற்போது மென்சக்தி கவர்ச்சியாக காணப்படுகின்றதே எப்படி?

சில கிழமைகளுக்கு முன் கஷ்மீரில் ஒரு இளம் போராளி    கொல்ப்பட்டான். அவரை ஆதரிப்பது அவருடைய ஊhவலத்தில் கலந்து கொள்வது கஷ்மீரைப் பொறுத்தவரையில் சட்டப்பிரச்சினை.  ஆனால் இரண்டு இலட்சம் கஷ்மீரியர்கள் அந்த   இறுதி ஊhவலத்தில் கலந்து கொண்டார்கள். ஒரு வன்சக்திக்கு காட்டப்பட்ட மென்சக்தி ஆதரவு அதுவாகும். வன்சக்தி தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. ஆனால் அதன் மென்சக்தி நீட்சி இருக்கின்றது.

தமிழ்த் தரப்பில் மென்சக்திக்கான தேவை உண்டா?

இந்நிலையில் எமக்கு ஒரு மென்சக்தி வேணுமா?   ஏன் வேணும்?   தற்போதுள்ள நிலைமையில் முஸ்லிம் பகுதிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கை இணைத்து  13ஐ விட கொஞ்சம் செறிவான அதிகாரங்களை உடைய ஒரு கட்டமைப்பு போதுமெனக் கருதுவோமாகவிருந்தால்  மென்சக்தி தேவையில்லை.  தற்போதுள்ள நிலைமைகளுக்குள்    ஒற்றையாட்சிக்கு நோகாது ஏதோவொன்றைப் பெறப்போகின்றோம் என்றால்  எமக்கு மென்சக்தி தேவையில்லை.  தமிழ் மக்கள் தங்களை   ஒரு தேசிய இனமாக சிந்திக்கும்போது தான்   மென்சக்தி அவசியமாகின்றது.

தமிழ் மக்களிள் பிரச்சினை சிறுபான்மை விவகாரமாக கருதப்படுமாயின்  மென்சக்தி தேவையில்லை. தமிழ் மக்களிள் பிரச்சினை தேசிய பிரச்சினையாக கருதப்படவேண்டும். அந்த தேசிய இனத்திற்குரிய  சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்  ஒரு உச்சபட்ச தன்னாட்சி அதிகாரங்களை கேட்கப்போகின்றோம் என வருகின்றபோதுதான்    தமிழ் மக்களுக்கு மென்சக்தி தேவை.

அவ்வாறு கோருகின்றபோது தற்போது பெரும்பான்மையினத்தின் பெரும்;பான்மை காணப்படுகின்ற பாராளுமன்ற நடைமுறை ஊடாக அதனை பெறமுடியுமா? இல்லை. அவ்வாறாயின் வேறு எப்படி பெறப்போகின்றோம்.  அதனைப்பெறுவதற்கான மக்கள் இயக்கம் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாடு எம்மிடத்தில் உண்டா?  இல்லை. அவ்வாறாயின் எவ்வாறு பெறப்போகின்றோம். இராஜதந்திர   நடைமுறையூடாக பெறப்போகின்றோம் என்றால் இராஜதந்திர நிலவரம் எப்படியிருக்கின்றது?

அண்மையில் அமெரிக்காவின் பிரதி இராஜங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்து சென்றிருக்கின்றார். அவர் என்ன சொன்னார்?  அவர் இலங்கை வந்ததிலிருந்து ஒருவிடயத்தை தெளிவாக கூறிவருகின்றார். பொருளாதார அபிவிருத்தி. கடந்த  16மாதகாலமாக   இலங்கையின் எல்லா விடயங்களையும் நிலைமாறுகால நீதி என்ற  விடயத்திற்குள் வைத்தே அனுகினார்கள்.  தற்போது பொருளாதார அபிவிருத்தி என்கின்றார்கள்.  நிஸா பிஸ்வால், கொழும்பு துறைமுகத்தை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டுமெனக் கூறுகின்றார்.  அதுமட்டுமல்ல  இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக கட்டியெழுப்புவது பற்றியும் கதைக்கின்றார்.

மற்றொரு சிங்கப்பூராக இலங்கையை கட்டியெழுப்புவதென்றால் என்ன? இனமுரண்பாடுகளை  பொருளதார அபிவிருத்தியூடாக கடக்கலாம் என அவர் நம்புகின்றார்.  பொருளாதார வளர்ச்சி மூலம் எல்லாவற்றையும் மீறி ஓடலாம் என அவர் நம்புகின்றார்.  நிஸா பிஸ்வாலின் கடைசி உரையில்  அவருடைய செய்தி   தெளிவாக தெரிகின்றது.  அதாவது பொருளாதார அபிவிருத்தி மூலம் எல்லாவற்றையும்  செய்யமுடியும் என்ற செய்தியை அமெரிக்க எமக்கு தர முற்படுகின்றது. நிலைமையும் அவ்வாறுதான் உள்ளது.  நிலைமாறு கால நீதியை வழங்குவதற்காக   பொதுமக்களின் கருத்துக்களை அறியச்செல்கின்றபோது  ஒருபகுதி மக்கள் எமக்கு நிவாரணம் தந்தாலே போதும் எனக் கூறுகின்ற அளவுக்கு களைத்தும் சலித்தும் போய்விட்டார்கள்.

காணமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு நொந்துபோய்விட்டார்கள்.  வயதாகிப்போய்விட்டார்கள். இவ்வாறு நிலைமை நீடித்துச்சென்றால் மக்கள் படிப்படியாக அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள்.  படிப்படியாக  மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படும் சூழலில் பொருளாதார வளர்ச்சியூடாக அவர்களை முழுமையாக அரசியல்  நீக்கம் செய்யலாம்.

அமெரிக்காவின் கொழும்புத்துறைமுகத்தை மையமாகக்கொண்டு இலங்கையை சிங்;ப்பூராக கட்டியெழுப்புவது என்ற செய்தியூடாக நாம் சிந்திப்போமாகவிருந்தால் நிலைமை மோசமாக இருக்கின்றது என்பதே அர்த்தமாகும். தமிழ் மக்கள் ஜெனீவாவை மட்டும் மையமாகக் கொண்டு சிந்திக்கின்றோம்.    ஜெனீவாவை நாம் அடியொற்றி நிற்கும் போது தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை   வெறுமனே மனித உரிமை  பிரச்சினையாக அவர்கள் சுருக்குகின்றார்கள்.   நிலைமாறு கால நீதி என்ற விடயத்தினால் மேலும் தமிழ் மக்களின் பிரச்சினையை சுருக்குகின்றார்கள்.

எமது விவகாரம் புதுடெல்லியிலும் , வொஷிங்டனிலும் கையாளப்படும் விடயமாகவிருக்கின்றது.   நாங்கள் ஆறு ஆண்டுகளாக எமது பிரச்சினைகளை மனித உரிமை பிரச்சினையாக ஜெனீவாவில் வைத்திருக்கின்றோம். அவர்கள் ஜெனீவாவில் எம்மை கட்டிப்போட்டது மகா வெற்றியாகும்.  இதுவே நிலைமை. தற்போதுள்ள அரசாங்கம் மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் குழந்தை.   தன்குழந்தையைத்தான் அவர்கள் பாதுகாப்பார்கள்.  அப்பிரசவத்திற்கு தமிழ் மக்களாகிய நாமும் மருத்துவிச்சிகளாக இருந்திருக்கின்றோம்.

குழந்தை பிறந்த பின்னர் மருத்துவிச்சிக்கு ஒரு கட்டம் வரையில் தான் மதிப்பளிக்க முடியும்.  ஆகக்குறைந்தது முதலாவது பிறந்ததினத்திற்கு அழைக்கமுடியும். தொடர்ந்தும் மருத்துவிச்சியை கொண்டு செல்ல முடியாது.    மகிந்த ராஜபக்ஷ எழுச்சி பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது நீலக்குழந்தை    எனக்கூறி பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. குழந்தையை பாதுகாப்பதா? மருத்துவிச்சியைப் பாதுகாப்பதா?  குழந்தையைப் பாதுகாப்பது என்ற முடிவை அவர்கள் எடுத்து விட்டால்  குழந்தைக்கு  நோகக்கூடாது. போர்க்குற்றம் தொடர்பாக பேசினால் குழந்தை அழும்.    அனைத்துலக விசாரணை என்று பேசினால் குழந்தைக்கு காய்ச்சல் வரும்.  அதற்கு மேலே சென்றால் தேங்காய் உடைப்பார்கள்.    ஒற்றையாட்சியை  நீக்குங்கள் என்றால் குழந்தைக்கு ஏற்புவலி வந்துவிடும்.  குழந்தையை பாதுகாக்கவேண்டும். மருத்துவிச்சியை அல்ல.

தமது குழந்தையை பாதுகாக்கவேண்டிய  அனைத்துலக சமூகம்   தமிழ் மக்களுக்கான நீதியை நாங்கள் விரும்பும் அந்த அடர்த்தியில் பெற்றுத்தராது. இதுவொரு எதிர்மறையான நிலைமை. அது மைத்திரி, ரணில் அரசாங்கத்தை தான் பாதுகாக்க முற்படும்.  இங்கேயும் எமக்கான தீர்வின் அடர்த்தி குறைப்போகின்றது.   சர்வசதேச உள்நாட்டு நிலவரங்களின் பிரகாரம் நாம் தேசிய இனம் என்ற நிலையில் உச்சபட்ச தன்னாட்சி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அருகிச்செல்கின்றன. இந்த கசப்பான யாதார்த்த முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பே மிகப்பெரும் சவால். இந்த யதார்த்தை எவ்வாறு கையாளப்போகின்றோம்.  தற்போதுள்ள பாரம்பரிய மிதவாதக் கட்சிகாளால் இந்த நிலைமையை கையாள முடியுமா?  கையாள முடியவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன?

தமிழ் மென்சக்தியை எப்படி கட்டியெழுப்பலாம்?

எங்களால்  ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியுமா?  மென்சக்தியை கட்டியெழுப்ப போகின்றோம் எனக் கூறிக்கொண்டு செயற்பாட்டு இயக்கங்களை கட்டியெழுப்ப முடியுமா? ஏழுவருடங்களாக  பேசுகின்றோம். எழுதுகின்றோம். முகநூலில் சண்டை பிடிக்கின்றோம். எதுவுமே நடக்கவில்லை.    கடந்த 16மாதங்களாக மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தித்தந்த ஒப்பீட்டளவிலான சிவில் ஜனநாயக வெளியை தமிழ் மக்கள் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  சிவில் வெளியை பாயன்படுத்த பயன்படுத்த தான் அது அதிகரிக்கும்.   அப்போது தான் மென்சக்தியின் வலுவும் அதிகரிக்கும்.

எங்களிடத்தில் போதியளவு செயற்பாட்டியக்கங்கள் வரவில்லை. எங்களிடத்தில் முழு நேர செயற்பாட்டளர்களே கிடையாது  என்பது கசப்பான விடயம்.  ஒப்பீட்டளவில் அதிகளவில் முழுநேரச் செயற்பாட்;டாளர்கள்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தான் உண்டு.   பிரதேசசபை, மாகாணசபை,பாராளுமன்றம்   என அரசியலே முழுநேர செயற்பாடக கொண்டிருப்பவர்கள் கூட்டமைப்பிடம் தான் உள்ளனர்.  ஏனைய கட்சிகளிடம் மிகச்சிலர் தான் உண்டு.

தமிழ்மக்களிடத்தில் தோன்றிய செயற்பாட்டியக்கங்கள் எனப் பார்க்கையில்  பகுதி நேர செயற்பாட்டாளர்களே உள்ளனர். பௌர்ணமி நாளில் கூடி அரசியல் கதைப்பவர்கள்.  நாம் அதிகபட்சம் ஓய்வுநேரத்தில் தான் அரசியலில் ஈடுபடுகின்றோம்.  அரசியலே முழுத்தொழிலாக செய்பவர்கள் எம்மிடத்தில் குறைவு.   செயற்பாட்டுத்தளம் கூட்டமைப்பிடத்தில் தான் உள்ளது.  முழு நேரமாக ஒருவர் செயற்படுவதாக இருந்தால் அதற்கு பல விடயங்கள் தேவையாகின்றது.

ஆயுதப்போராட்டத்தை  இயக்கங்கள் ஆரம்பித்த போது உணவு, உடை போன்ற அனைத்து விடயங்களை வழங்கி பராமரித்தார்கள். அதன் பின்னர் கொடுப்பனவு செய்தார்கள்.   பின்னரான காலத்தில் திருமணம் செய்தால் அதற்கும் கொடுப்பனவு செய்தார்கள்.   அவ்வறிருக்கையில் குடும்பத்தை, தொழிலை கவனிக்க வேண்டும். செயற்பாட்டுஇயக்கமாகவும் இருக்க வேண்டுமென்றால் முடியாத காரியம். இது தான் மென்சக்தியை கட்டியெழுப்புவதில் எமக்குள்ள பிரதான பிரச்சினை. இதனாலேயே பாரம்பரிய மிதவாதத்திற்குள்ளேயே செல்கின்றமைக்கான அடிப்படையாகவுள்ளது.  கூட்டமைப்பு தமிழ் மக்கள்மத்தியில் நிலைக்கின்றது என்றால் அதற்கான அடிப்படையும் இதுதான்.

ஆகவே தமிழ் மக்கள் மத்தியில் மென்சக்தி    என்ற உரையாடல்   சுகமான கற்பனையாகத்தான் உள்ளது. வன்சக்தியும் இல்லை.  மறுபக்கத்தில் கனவு காண்கின்றோம். எமது பேரம் தாழ்ந்துகொண்டே போகின்றது. வடக்கு கிழக்கே சவாலாகிவிட்ட நிலையில் எப்படி ஒற்றையட்சிக்கு வெளியே போகக்கூடிய தன்னாட்சியைப்    பெறப்போகின்றோம்.  அதற்காக பாராளுமன்றத்திற்கு வெளியே போராடும் வலு எமக்குண்டா?  அந்த வலுவை நாம் எப்படி பெறப்போகின்றோம்.  இங்கிருந்து தான்    நாம் தமிழ் மென்சக்தியை கட்டியெழுப்பலாம்.

நாம் ஜோசப் நையின் அடிப்படையில்இருந்து சிந்திக்கவேண்டியதில்லை. அதுவொரு அமெரிக்கச் சிந்தனை. அவர் அரசற்ற தரப்புக்களாக    அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா .நிறுவனங்கள் உள்ளிட்ட வற்றை  கருதுகின்றார். அரசற்ற தரப்பாக விருக்கும் இனங்களை அவருடைய ஆய்வுக்குள் உட்படுத்தவில்லை.  அது அமெரிக்காவின்  நோக்கு நிலை.  நாம் அரசற்ற தரப்பு. ஆகவே அமெரிக்காவின் கண்கொண்டு இந்த உலகத்தை பார்க்கவேண்டிய அவசியமில்லை.

நாம் எமது மக்களின் கூட்டுக் காயங்களிலிருந்தும், கூட்டு மனவடுக்களிலிருந்தும் எமது பிரச்சினையை அணுகலாம்.  அவ்வாறு அணுகும்போது தமிழ் மென்சக்தியை   கட்டியெழுப்புவதை எப்படி?  முதலில் தமிழ் மக்கள் தங்களை தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ண உரிமையின் பிராகாரம் உச்சபட்டச தன்னாட்சி தேவையென்பதை முடிவெடுக்கவேண்டும்.  அது பாராளுமன்ற செயற்பாடுகளால் மட்டும் கிடையாது என்பதோடு அதற்கும்வெளியே மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் ஊடாகவும், இராஜ்ஜ செயற்பாடுகள் ஊடாகவும்  தான் பெறலாம் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

அவ்வாறு வரும்போது தமிழகமும், புலம்பெயர் சமுகம் தவிர்க்கப்பட முடியாத இரு சிறகுகள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.   புலபெயர் சமுகத்தை ஒரு இராஜ்ஜிய செல்வாக்கு மிக்க சக்தியாக கட்டியெழுப்புவது என்ற முடிவை  மேற்கொள்ளவேண்டும்.   இங்கு களத்தில் உள்ள தலைமை தான் அந்த முடிவை எடுக்கவேண்டும். அதன் ஊடாகவே தமிழ் மென்சக்தியை கட்டியெழுப்ப முடியும்.

தேசிய இனமாக சிந்திக்க ஆரம்பிக்கின்றபோது உள்ளுரிலும், அயலூரிலும்,அனைத்துல மட்டத்திலிருந்தும் ஆபத்துக்கள் வரும்.  எதிர்கொள்ளத்தயாராக விருக்கவேண்டும்.  ரிஸ்க்எடுங்கள். கடந்த  பத்தாண்டுகளில் சிங்கத்தலைவர்கள் எடுத்த ரிஸ்கைஉதாரணமாக பார்க்கலாம். மைத்திரிபால சிறிசேன சிங்கள கடும்போக்கு வாதத்திற்கு தலைமைதாங்க கூடிய ஒரு தலைவராக தோன்றவில்லை. ஆனால் இலங்கை தீவில் நிகழ்ந்திருக்கும்  தற்போதைய மாற்றத்திற்கு அவர் எடுத்த ரிஸ்க் தான் காரணம்.  ஒரு நாள் முழுவதும் அவர் தென்னந்தோப்பினுள் ஒழிந்திருந்திருக்கின்றார்.  சந்திரிகாவும் மைத்திரிபால சிறிசேனவும் எடுத்த அந்த ரிஸ்க் தான்  தற்போது இலங்கை அனுபவிக்கும் இந்த மாற்ற்த்திற்கும் அனைத்துலக சமுகங்கள்   அனுவிக்கும் தற்போதைய நிலைமைகளுக்கும் காரணமாகின்றது.

ஏன்   எமது தலைவர்கள் குறைந்த பட்சம் அந்தளவுக்கு கூட ரிஸ்க் எடுக்ககூடாது.  நாம் எமக்கு சரியெனப் பட்ட ஒன்றுக்காக ரிஸ்க் எடுக்கவேண்டும்.  மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷ போன்று மிடுக்காக, கடும் குரலுடன் இருக்கும் ஒருவர் அல்ல. ஆனால் பாரிய ரிஸ்க்கை எடுத்திருக்கின்றார்.  தன்னுடைய  சமுகத்திற்கு நல்லது செய்யவேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுத்திருக்கின்றார்.  நாமும் அவரைப்போல் ரிஸ்க் எடப்போமாகவிருந்தால்    எங்கள் அரசியலை அதிரடியாக மாற்றலாம்.  நாம் ரிஸ்க் எடுக்காத மக்கள் இல்லை.   2009இற்கு முன்னர்நாங்கள் ரிஸ்க் எடுத்திருக்கின்றோம். யாழ்ப்பண கிடுகுவேலி கந்தபுராண கலாசாரத்தலிருந்து கரும்புலிக்கலாசாரம் வரையில்  போராட்டம் கொண்டுவந்து விட்டுள்ளது. கரும்புலி கலாசாரத்தை முழு உலகமும் அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்தது. அதுவொரு வன்சக்தி. அவ்வாhறன மாற்றத்தை காட்டிய மக்கள் நாங்கள். எங்களால்  அதன் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாதா?  ஒரு மென்சக்தியை எங்களால் கட்டியெழுப்ப முடியாதா? அதற்கான மூலக்கூறுகள் எங்களிடத்தில் இல்லையா?

2009 மேக்கு முதல் நாம் அதனைக் கொண்டிருந்தோம். எனவே தமிழ்த் தலைவர்களும்  தமிழ்ச் செயற்பாட்டு இயக்கங்களும் தமக்கு சரியெனப்பட்ட ஒன்றுக்காக     ரிஸ்க் எடுக்க தயாராகவேண்டும். குறைந்த பட்சம் சந்திரிகா, மைத்திரி  போலாவது  ஆகக்குறைந்த ரிஸ்க் எடுக்க தயாராகவேண்டும். அவ்வாறு ரிஸ்க் எடுக்க தயாராகின்றபோது தான்   தமிழ் மென்சக்தியை கட்டியெழுப்பலாம். அப்படி கட்டியெழுப்பபடும் ஒரு மென்சக்திதான்  தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரும்.