செய்திகள்

2016 இல் தீர்வு என்பது எனது கணிப்பு மட்டுமே: சம்பந்தன் திடீர் குத்துக்கரணம்

2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது எனது சுய கணிப்பே என ‘குத்துக்கரணம்’ அடித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்.

‘2016 இல் தீர்வு’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதியும் தனது சுய கணிப்பின் அடிப்படையில் அமைந்ததே எனவும் அவர் தெரிவித்தார்.

கோப்பாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து சம்பந்தன் பேசினார். அச்சந்திப்பில், 2016 தீர்வு என்ற உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா? எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய அரசுக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்கியது. புதிய அரசு அமைய ஆதரவு அளித்தால் 2016 இல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வாக்குறுதிகளை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய அரசுக்கும் தமிழ் மக்கள் தமது அமோக ஆதரவை வழங்கியிருந்தனர். எனினும் புதிய அரசு பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.

இந்நிலையிலேயே 2016 இல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இப்போது அது தனது கணிப்பு மட்டுமே எனத் திடீர் குத்துக்கரணம் அடித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் உருப்படியான தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் தற்போது சம்பந்தன் ஊடகங்கள் மீது பழியைப் போட்டுமுள்ளார்.

தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பைக் குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். தீர்வு ஒன்றை எட்ட வேண்டுமாயின் அதற்கென சில ஒழுங்குகள் உள்ளன. சில கருமங்கள் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அந்த ஒழுங்குகள் என்ன? நடைபெற்றிருக்கவேண்டிய கருமங்கள் என்ன? என்ற விடயத்தை அவர் தெரிவிக்கவில்லை.

என்னுடைய கணிப்பின் பிரகாரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ வீட்டிற்குப் போயிருக்கின்றார். மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்திருக்கின்றார். ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகின்றார் என்பது என்னுடைய கணிப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒத்துழைப்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்திருக்கின்றார். பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் எமது பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்ற சிந்தனை இருக்கின்றது என்பது என்னுடைய மற்றுமொரு கணிப்பு எனவும் தனது கணிப்புத் தொடர்பான தகவல்களை நேற்று செய்தியாளர்களிடம் சம்பந்தன் தெரிவித்தார் .

மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சியும், ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

இந் நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் தாமதம் ஏற்படவில்லை. விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே என்னுடைய கணிப்பு. ஆனால் எனது கணிப்பைக் குழப்பும் வகையில் ஊடகங்களும் செயற்படுகின்றன. ஊடகங்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகளும் எனது கணிப்பினை குழப்பும் வகையில் உள்ளது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.