2017 இல் ஆட்சியை கவிழ்ப்பேன் : நான் பிரதமராகுவேன் என்கிறார் மகிந்த
அடுத்த வருடத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு எனவும் அதனை நோக்கியே தனது பயணமும் அமைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகவிலாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்குள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராயும் போது எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கு இடையில் தற்போது முறுகல் நிலைமை காணப்படுவதாகவும், இவ்வாறான சூழலுடன் நாடொன்று முன்னோக்கி செல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதி ஒருவருக்கு அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு மீண்டும் அரசத் தலைவராக முடியாதா என சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசத் தலைவராகும் எண்ணம் தனக்கு கிடையாது என கூறியுள்ளார்.
அரசத் தலைவராகாமல், தனக்கு நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து கடமையாற்ற தயாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த செயற்பாட்டை செய்ய முடியும் என்றால், 1970ஆம் ஆண்டு முதல் நன்றாக தெரிந்த ஒருவருடன் இணைந்து தனக்கு கடமையாற்ற முடியாதா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
அவ்வாறான நிலைமையொன்று உருவாகும் பட்சத்தில், அது தனது நிபந்தனைகளின் பிரகாரமே இடம்பெற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெறுகின்ற விதம் தொடர்பாக மாத்திரமன்றி, அரசியலமைப்பின் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர்கள் தன்னுடன் கலந்துரையாடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றமையானது, தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். -(3)




