செய்திகள்

21 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பவரை திருமணம் செய்த பெண்

எழுந்து மற்றவர்களைப்போல நடமாட முடியாமல் 21 ஆண்டுகள் படுக்கையில் இருக்கும் குமரி மாவட்ட இளைஞரை, நெல்லை பெண் திருமணம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார். இரட்டையர்களான இவர்கள் சிறுவயதில் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து நரம்பு பிரச்னை ஏற்பட்டு இருவரும் நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சோகம் நிகழ்ந்து விட்டது. 25 வயதாகும் இருவரும் கடந்த 21 ஆண்டுகளாக படுக்கையிலேயே உள்ளனர்.

இந்த இரண்டு சகோதரர்களில் ஒருவரான விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போலவே படுக்கையில் திருமணம் நடந்தது. அப்போது, திருமண விழாவில் கலந்து கொண்ட நெல்லை மாவட்டம் பருத்திக்காடு கிராமத்தை சேர்ந்த சிவகுலதேவி, ஜெயக்குமாரிடம் காதல் வயப்பட்டுள்ளார்.

அதனையடுத்து இருவரும் தங்களின் பெற்றோர் ஆசியுடன் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து படுக்கையில் படுத்தபடி, சிவகுலதேவிக்கு ஜெயக்குமார் தாலி கட்டினார்.

இந்த அபூர்வ திருமண ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.